Saturday 7 December 2013

ஒரு குண்டு கலர் பந்தயம்

    கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதில் மகிழ்ச்சி என்பது நம்முடைய ஜீன்லயே  கலந்தது போல.அதன் தூண்டுதலாக ஒவ்வொரு நாள் சாயங்காலமும்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டருக்கு வரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதற்காக, நண்பர்கள் புடைசூழ ஒரு நடை போய்விட்டு வருவதுண்டு.அது நம்ம கேப்டன் நடித்த “உழவன் மகன்” வெளிவந்திருந்த சமயம்.செம கூட்டமுன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சு. பக்கத்து ஊருக்காரங்கெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா வந்துருக்காங்கன்னு சொன்னவுடனே, வழக்கம் போல கெளம்பிட்டோம் நம்ம கேங் ஆளுங்களோட வேடிக்கை பாக்க.
                                                 நம்ம கேங்ல மார்க்ஸ்னு ஒருத்தன் கூடவே வருவான். அவனுக்கு கம்யூனிஸம்னா என்னான்னே தெரியாது.அவனோட அப்பா கம்யூனிஸ்டா என்னான்னு எங்களுக்கு தெரியாது.அவரு ஏதோ ஆசையில, மகன் பெரிய புரட்சியாளரா வருவான்னு நெனைச்சிட்டு பேரு வச்சிட்டாரு போல.இன்னமும் இதே மாதிரி ஊருக்குள்ள நெறைய பேரு, பேரு வச்சிக்கிட்டு திரியுறாங்கன்றது வேற விஷயம்.நம்ம மார்க்ஸ் ஒரு வெள்ளந்தி.நம்ம பயலுக அவனை பலவிதமா பேர் சொல்லி கூப்பிடுவானுங்க. மார்க்கஸு, மார்க்கோஸ்,மார்கஸ்,மாரஸ்னு. நல்லவேளை அப்போ  யாருக்கும் சரக்கு பேரு தெரியாததுனால மார்பியஸ்னு கூப்பிடல.(கோடான கோடி நன்றிகள் ஏசப்பா).நம்மாளு செம கலரா இருப்பான். புயல் மழையில நனைஞ்ச வயசான பனைமரம் போல.அவன் கலருக்கு அவன் மண்டைமுடி பிச்சை வாங்கணும்.ஆனா அவன் பல்லை பாத்தோமுன்னா, முத்து நமக்கு கருப்பா தெரியும். தாஜ்மகாலுக்கு கட்டுன பளிங்கு கல்லாட்டம் பளீர்னு ஜொலிக்கும்.சரி மேட்டருக்கு வருவோம்.மேட்டர்னா கதை தான்.
                                                       உழவன் மகனுக்கு வந்த கூட்டத்தை பார்க்க வழக்கம் போல போகும்போது ,திடீர்னு ஒரு போட்டி வந்துருச்சு.எதுத்தாப்புல வர்ற மொத பஸ்ஸோட கண்ணாடிய ஒரே கல்லுல உடைக்கணும்னு. கல்லெறியுறதுல கில்லாடி,எங்க கூட இருக்க மண்டையன் தான்.பத்து சிட்டுக்குருவிய ஒத்தைக்கல்லுல விழுக்காத்தட்டிருவான்.அவன் குறிக்கு ஒருகல் போதும்.மறுகல் தேவைப்படாது.குண்டு வெளாட்டுலேயே ஊறிப்போயி பக்கத்து ஊர்க்காரப்பயலுகள போண்டியாக்குனவன்.ஒரே கல்லுல பஸ் கண்ணாடிய உடைச்சா,ஒரு குண்டு கலரு பந்தயம்.மண்டையன் ரெடியாயிட்டான்.வாகா ஒரு கல்லை எடுத்து தூரத்துல வர்ற ராணி மங்கம்மா பஸ்ஸை பாத்துக்கிட்டு,புளியமரத்தடியில நின்னான்.கூடப்போன பயலுகளுக்கெல்லாம் அவனே ஒரு வேடிக்கையா இருந்தான். கம்பத்துக்கு போற ராணி மங்கம்மா பக்கத்துல வந்துருச்சு.மண்டையன் குறியெல்லாம் வைக்கல.கைக்கு தெரியும்ல அதோட குறி.ஒரே எறி.பஸ் கண்ணாடி படார்னு கல்கண்டு மாதிரி நொறுங்கிருச்சு.கண்ணாடி தெறிக்குறதுக்கு முன்னாடியே நம்ம பயலுக ஓடிட்டாங்க,தீக்கொழுத்தி மடத்துக்கு எதுத்தாப்புல இருக்க தென்னந்தோப்புக்கு.
                            பஸ்ஸை நிப்பாட்டிட்டு டிரைவரும்,கண்டக்டரும் கல்லை எறிஞ்சவனை தேடுறாங்க.அன்னிக்கு அமாவாசை இருட்டு மாதிரி இருக்கு. இப்போவே நம்மூரு அப்படித்தான் இருக்கு.அப்போல்லாம் சொல்லவா வேணும்.நம்ம பயலுக ஓடிப்போயி ஆளுக்கொரு தென்னைமரத்தை அணைவா புடிச்சு, மறைவா நிக்குறாங்க.கண்டக்டரும்,டிரைவரும் கண்ணை தேச்சுக்கிட்டு தென்னந்தோப்புக்குள்ள தேடுறாங்க.மார்க்ஸ் ஒரு குட்டி தென்னம்பிள்ளைகிட்ட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்.கண்டக்டரும் அவன் பக்கத்துலேயே நின்னுக்கிட்டு  தேடுறாரு.ஆனாலும் அவனை கண்டுபிடிக்க முடியல. இருட்டுல அவன் மேட்ச் ஆயிட்டான்.கால்மணி நேரமா அவன் பக்கத்துலயே ஆளை தேடுறாரு கண்டக்டர்.மார்க்ஸ்க்கு சிரிப்பை அடக்க முடியல.பக்கத்துல நிக்குற என்னையே கண்டுபிடிக்க முடியலையே, இந்தாளெல்லாம் எப்படி டிக்கெட் போடப்போறாரோன்னு, அடக்க முடியாத சிரிப்பை அவுத்து உட்டுட்டான்.பளீர்னு தெரிஞ்ச அவனோட முத்துப்பல்லை அடையாளம் கண்ட கண்டக்டர்,ஒரேயடியா அவனைப் புடிச்சுக்கிட்டு, “கல்லெறிஞ்சவனை கண்டுபிடிச்சிட்டேன்”னு டிரைவர்கிட்ட சவுண்டு விடவும், அவனை பிடிச்சுக்கிட்டு வண்டிய கெளப்பிட்டாங்க கம்பம் டிப்போவுக்கு.
                               பஸ்ஸுல மார்க்ஸை ஏத்திக்கிட்டு போனது தான் தாமதம். ஒளிஞ்சிருந்தவய்ங்க ஊருக்குள்ள தகவல் சொல்லிட்டாய்ங்க.ஆனா மார்க்ஸ் மட்டும் , ”காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு பஸ் ஜன்னல் வழியா கத்திக்கிட்டே கம்பம் டிப்போவுக்கு போயிட்டான்.விஷயம் தெரிஞ்ச மார்க்ஸோட மாமா,டிப்போவுக்கு போயி,கண்ணாடிய உடைச்சதுக்கு எண்ணூறு ரூவா அபராதமும்,இலவச இணைப்பா சிலபல அடிகளும் கொடுத்து மார்க்ஸை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.அப்படி வந்த மறுநாள் தான் மார்க்ஸ், மண்டையனுக்கு குண்டுகலர் வாங்கிக்குடுத்தான்.

1 comment:

  1. superb narration brother. I could recognize all persons you mentioned. I also heard this incident long back but now I could realize who is the culprit. Marks is still Marks.

    ReplyDelete