Thursday 21 April 2016

பத்த வச்சிட்டியே பரட்டை


இதற்கு மேலும் இருந்தால் உடைந்துவிடும் என்ற நிலையில் இருந்த அந்த சிகரெட்டை எடுத்தான் சோனைமுத்தன்.

"அண்ணே வத்திப்பெட்டி இருக்கா"

"ஆள் பாத்து கேளு தம்பி. மரியாதை முக்கியம்"

"மரியாதையா தான கேட்டேன். ரொம்ப சலிப்பா சொல்றிங்க. இருந்தா குடுங்க"

"மறுபடியும் பார்றா" "பளார்"

"என்னைய அடிச்சீட்டில்ல. இந்தா ஆளை கூட்டிட்டு வர்றேன்"

கிட்டத்தட்ட இருபதுபேர் வந்து அடித்தவரை புரட்டி எடுத்து விட்டார்கள். 

"என்னையவே அடிச்சிட்டீங்க்கல்ல. நானும் வர்றேண்டா ஆட்களோட"

அவர் சார்பாக ஐம்பது பேர் வந்து துவம்சம் செய்து விட்டனர். அதை பார்த்த ஊர்க்காரர்கள்,

 "எங்க ஊர்க்காரர்களையே அடிக்கிறீங்களா"

 என்று பதிலுக்கு அடித்தார்கள். பெரிய கலவரம் ஆகிவிட்டது. அதனை அடக்க மாநில அரசால் முடியவில்லை. ஒரு பக்கம் சாதி, மறுபக்கம் மதம் கையிலெடுக்கப்பட்டது.  மாநில அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. துணைநிலை ராணுவம் வரவழைக்கப்பட்டது. கடுமையான முயற்சியின் காரணமாக கலவரத்தில் ஒரு சாரார் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்காணித்துக்கொண்டே இருந்த ஒருநாடு,

 "எப்படி எங்கள் மதத்தவர் மீது தாக்குதல் நடத்தலாம்"

 என்று கடுமையாக கேட்டு, தாக்குதலுக்கு தயாரானது. 
இதை அறிந்த நட்பு நாடு,
 
"நீங்கள் தாக்கினால் நாங்களும் தாக்குவோம்"
 
என ஆதரவிற்கு வந்தது.  அந்தநேரம் வந்த நட்பு நாட்டின் விமானம் தற்செயலாக விபத்துக்குள்ளாக, நட்பு நாடு கடும்கோபம்  கொண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டது. அந்த இரு நாடுகளுக்கும் ஆதரவாக உலக நாடுகள் இரு அணிகளாக திரண்டனர். விமான தாக்குதல்கள், அணுகுண்டு தாக்குதல்கள் மூலம் போர் பெரிய அளவில் ஆரம்பித்தது.


சோனைமுத்தன் இன்னமும் பத்த வைக்காத சிகரெட்டிற்காக, வத்திப்பெட்டி வைத்திருப்பவரை தேடிக்கொண்டிருந்தான்