Wednesday 9 April 2014

MUSIC

                                  அந்த ஊரில் இருக்கும் எல்லாருமே இசைப்பிரியர்கள். இசைப்பிரியர்களில் இரண்டு வகைதான். ஒன்று, பாட்டு பாடுபவர்கள்.இரண்டு, பாட்டு கேட்பவர்கள். அதில் உயர்திணை, அஃறிணை எல்லாம் கிடையாது. பாட்டாலேயே அந்த ஊர் இயங்கியது என்றே சொல்லலாம். நாற்று நடுவதானாலும் சரி, அறுவடையானாலும் சரி, வேலை நடக்குதோ இல்லையோ, பாட்டு மட்டும் வேளாவேளைக்கு பாடி விடுவார்கள்.

                                       ஒருமுறை பசுமாட்டுக்கு மடியில பால்கட்டி, பால்சுரக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. மாட்டுக்காரன் டாக்டர்கிட்ட போகலை.நேரா பசுநேசன்கிட்ட தான் போனான்.பசுநேசனும் விசயத்தை கேள்விப்பட்டவுடன், வேட்டியக்கூட கட்டாம போட்டுருந்த டவுசரோடயே போயிட்டாரு. போன வேகத்துலயே, "செண்பகமே.. செண்பகமே"ன்னு பாட்டை அவுத்து விட்டாரு. அதைக்கேட்ட பசு,அய்யய்யோ இந்தாளு காதுல ரத்தம் வரவச்சிருவான் போலேயேன்னு பயந்து, பாத்திரம் பத்தாத அளவுக்கு பால் குடுத்துச்சு. இன்னொருநாள் ஜல்லிக்கட்டு நடந்துச்சு. பேச்சியம்மன் கோயில்காளை எவனுக்கும் அடங்காம ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்துச்சு. அங்கேயும் காளைக்கு முன்னாடி துணிச்சலா நின்னு, "பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி"ன்னு பாடுனாரு. அதைக்கேட்ட காளை, ஆளைவிடுறா சாமின்னு ஊரைவிட்டே ஓடிருச்சு. இந்த அதிசயத்தை கேள்விப்பட்ட பாம்பேயில இருந்து வந்த லிவிங்ஸ்டன் இன்னிசைக்குழுவினர் அவரை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க. அவரும் பெரிய பாடகராகி அங்கேயே செட்டிலாயிட்டாரு. இப்போ பாப் பாடகர்களுக்கு செம டஃப் குடுப்பதாக கேள்வி. பசுநேசன் ஊரைவிட்டு போனதுல ஊர்மக்கள் ரொம்ப ஹேப்பி.

                                                    அடுத்ததா அந்த ஊருக்கு வந்தவர்தான் சின்னத்தம்பி. அவர் பாட்டு இல்லாம எந்த கொண்டாட்டமும் முழுமையடையாது. அவர் பேருதான் சின்னத்தம்பி, ஆளைப்பாத்தா நீர்யானை மாதிரி இருப்பாப்ல. உடல்வாகுல அந்த ஜில்லாவுலேயே அவர்தான் பெரியதம்பி. அம்பி கொழுகொழுன்னு அமுல்பேபி மாதிரி இருக்கானேன்னு எல்லாரும் கொஞ்சுறதை, தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான் சின்னத்தம்பி. அவர் லேடீஸ் விசயத்துல வீக்குன்னு தெரிஞ்ச ஊர்க்காரங்க, பக்கத்து ஊர்ல இருந்து துணைநிலை ராணுவப்படையை வரவழைச்சு, ஏதோ தீவுக்கு அனுப்பினதா ஒரு பேச்சு அடிபடுது.

                                                     அந்த ஊர்ல நல்லா பாடி, பேருவாங்குனதுன்னா வெள்ளைச்சாமியும், சின்ராசுவும் தான். அதுல வெள்ளைச்சாமி சீனியர். அதுக்கு அப்புறம்தான் சின்ராசு. ராத்திரி எட்டு மணிக்கு அலாரம் வச்சிட்டுத்தான் பாடுவாங்க. ரெண்டுபேருக்குமே காதல் தோல்வி. அதிலேயும் வெள்ளைச்சாமியோட, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" பாட்டும், சின்ராசுவோட, "ரோசாப்பு சின்ன ரோசாப்பு" பாட்டும் ரொம்பவே பிரசித்தம். அவங்க பாட்ட கேட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும், அவங்களோட காதல்தோல்வியின் காரணம். பாட்டு பாடுறேன் கேளு.. கேளுன்னா, எவ அவனோட குடும்பம் நடத்துவா.

                                                     இதுக்கெல்லாம் முடிவு கட்ட, அந்த ஊர்ல இருக்குற ஒரு பெரியவர் துணிஞ்சிட்டார். அவர்தான் வெள்ளியங்கிரி தாத்தா. அவர் மிருதங்கத்தை எடுத்து, "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" ன்னு பாடுனதைக் கேட்டு, அந்த ஊர்ல ரெண்டுமுறை பூகம்பமே வந்துருச்சு. அதுக்கப்புறம் தான் ஊரே ஒண்ணுகூடி, இனிமே இந்த ஊர்ல யாரும் பாட்டுபாடக் கூடாதுன்னு தீர்மானம் போட்டு, ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வச்சிருக்காங்க.