Tuesday 18 December 2012

பாலாவின் கடவுள்

அனைத்து பற்றுக்களையும் துறந்துவிட்டு வாழ்வின் இறுதியை நெருங்கிய அநேகமக்கள் கூடும் இடமான காசியில் இருந்துவரும் பலபிரிவு சாமியார்களையும், அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியுமே கூறுகிறது படத்தின் துவக்கம்.இறுக்கமான சிந்தனையை காட்டும் முயற்சியில்,யாருமே நுழையத்தவறிய,தயங்கிய தளத்தில் பயணித்த பாலா,ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை எழுத்திலிருந்து திரைக்கு மாற்றியுள்ளார். ஏழாம் உலகம் கடவுளைப்பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையாததால்,அதனைக் கொண்டுசேர்க்கும் முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாலாவின் இந்தப்படம்.வாழ்வின் மிச்சத்தைக் கழிக்க அநேகமக்கள் தேர்ந்தெடுக்கும் இடமான காசியில்,சாமியார்களாக இருப்பவர்களின் அடிப்படைத்தேவைகள் எளிதில் பூர்த்தியடைவதால், மிகுதியான சாமியார்களின் களமாக காசி இருந்துவருகிறது என்பதுடன் துவங்கும் இப்படத்தில்,மூத்த சாமியார் ஒருவரால்,”மேரே ப்ரம்மா,மேரே ஈஸ்வர்,அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உருவாக்கப்படுகிறார் கதாநாயகன். துஷ்டர்களை இனம் காணும் தன்மையும்,அழிக்கும் மனோதிடமும் உள்ளவனாக சித்தரிக்கப்பட்டுள்ள கதையின் நாயகன்,அதே மனநிலையுடன் (சொந்த)ஊருக்கு வருகிறான்.வாழ்வின் உச்சநிலையைக் கழிக்கவரும் மனிதர்களை மட்டுமே சந்தித்த அவன், வாழ்க்கையின் போக்கில் இருக்கும் மனிதர்களை சந்திக்கிறான்.இருந்தாலும் பழக்கப்பட்ட எண்ணத்தை மாற்றமுடியுமா என்ன?.அவன்தான் முக்திதேடும் மனிதர்களாலும்,நீதான் கடவுள் என்று கூறுபவர்களாலும் உருவாக்கப்பட்டவன் ஆயிற்றே.அதனால்தான் களம் வேறுபட்ட போதிலும் அவனின் மனநிலை அப்படியே இருக்கிறது.ஆகவே அவன் அம்மாவிடம் பேசும்போது,”ஐயிரண்டு திங்களாய்.....” என்ற பாடலை சொல்லுவதோடு,அந்தப் பெண்மணியிடம்,”தூமைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்கிறான்.வசனகர்த்தா அந்தக்கேள்வியை அவளிடம் கேட்கிறாரா? அல்லது பார்வையாளர்களிடம் கேட்கிறாரா? என்பதே ஒரு கேள்வி. பிச்சையை மட்டுமே அறிந்தவர்களையும்,அடித்து துன்புறுத்தப்பட்டு பிச்சைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும்,வியாபாரப்பொருட்களாக முதலீடு செய்து,விலைக்கு வாங்கி பிச்சைக்கு பயன்படுத்தப்படுபவர்களையும் காட்டும்போது இயக்குநரின் தந்திரம்,இளகிய மனதினரின் கழிவிரக்கத்தை காசாக்க முயற்சி செய்கிறது.இதில் மனதிற்கு இதமாக(?) அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிவேறு.அப்போதுதானே தட்டில் அதிக காசு விழும். இதுபோன்ற மூர்க்க சிந்தனைகளையெல்லாம்,வலிமையான சினிமாவாக காட்டுவது என்பது பாலாவிற்கே உரித்தான பாணி.தமிழில் ஓர் உலகசினிமா என்று பறைசாற்றினாலும், குத்துப்பாட்டு என்ற முக்கிய அம்சம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த இயக்குநர்,இதில் அந்தக்குறை தெரியாமல் இருக்க,எம்.ஜி.ஆர்,சிவாஜி,சிம்பு பாடல்களைக்காட்டி தீவிரத்தை உணர்த்துகிறார். பின்னர்தான் கடவுளை பற்றிய விளக்கங்களை பாலா மற்றும் ஜெயமோகன் கூட்டணி விளக்கத்தொடங்குகிறது.தமிழ்சினிமாவில் இதுவரை எந்தப்படத்திலும், எந்த ஹீரோவும் கெட்டவர்களை அழித்ததில்லை(?).ஆனால் இதில் மட்டுமே பாலாவின் கடவுள் கெட்டவர்களை அழிக்கிறார்.இவர் மட்டுமே தன்னைக் கடவுள் என்று அறிவிக்கிறார்.ஏனெனில் பாலாவின் கடவுள் மட்டுமே,தான் நுகரும் பொருட்களில் அதிகமாக கஞ்சாவும்,வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளில் கொஞ்சம் சமஸ்கிருதமும் பயன்படுத்துகிறார். எல்லாரும் வணங்கும் சாமிக்கு கையில்லை,காலில்லை,வாய் பேசாது, கண் பார்க்காது,காது கேட்காது என்று உருவகப்படுத்திய இயக்குநர்,கடவுளின் கிருபையால் சாமி உயிருடன் இருப்பதுபோல காட்டிவிட்டார்.கதைக்கு தேவையோ என்னவோ சாமி சிலநேரம் பார்க்கவும் செய்கிறார்,பேசியும் விடுகிறார்.கடவுளின் இருப்பைக்காட்டி ஒருபுறம் சினிமா எடுத்து பணம் சம்பாதிக்கும்போது,கடவுளின் செயல்பாடு இல்லாநிலையைக்காட்டி (மௌனம் என்றுகூட சொல்லமுடியாது) பணம் சம்பாதிப்பதையும் குறைசொல்ல முடியாது. அதுதானே ஜனநாயகம்.அதிலும்,”அட நீ என்ன முருகா! வர வர பிச்சக்காரங்யகிட்டயே பிச்ச கேக்க ஆரம்பிச்சுட்ட” என்ற வசனம் சொல்லி,பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் போது அதுவும் ஜனநாயகம். தான் பிச்சையெடுப்பதை குறையென்று உணரமுடியாத அளவிற்கு பழக்கப்பட்ட சிறுவனின் நக்கல் பேச்சின் வாயிலாக ஜெயமோகன்,”முருகா..நீ பாட்டுக்கு கோவிச்சுக்கிட்டு மலைக்கு மலை தாவிட்டு போயிட்ட..நாங்கல்ல பிச்சையெடுக்க கஷ்டப்படுறோம்” எனும்போது பணம் சம்பாதிக்க அவர் கையாளும் யுக்தி புரிகிறது.மேலும், “ஏய் மொட்டை..அன்னக்காவடி..பிச்சை போடுறா” “அன்ன லச்சுமி..ஆதி லச்சுமி... மகாலச்சுமி... அடியே ஜோதிலச்சுமி.காது கேக்காதது மாதிரி போறவ”.இந்த வசனத்திற்காகவே எல்லா லட்சுமிகளும் திரு.ஜெயமோகனின் வாசல்கதவைத் தட்டுவார்கள். இப்படித்தான் போகின்றன காமெடி என்ற பெயரால் காட்சிகள்.அதிலும் அந்த அரவாணி சாமியிடம்,”சாமி இத்தன வருசமா உன்ன மட்டும்தான சாமின்னு சொல்லிக்கிட்டு (நம்பவில்லை) இருக்கோம்.நல்ல வழிகாட்டு சாமி..இதுக்கும் மேல பேசாம இருந்து இவ சீரழிஞ்சு போனா நீ நாசமா நரக்கழிஞ்சு போவ” என்று சாபம் விடுகிறா(ள்)(ன்). கதையின் போக்கை சுவாரஸியமாக நகர்த்த ஏதோ போனால் போகட்டும் என்று சாமிய பேச வைத்துவிடுகிறார் பாலா.ஈனப்பிறவிகளின் குரலாக,”பாத்துப் புழுத்துறான்..தேவடியா மகன்” என்பது போன்ற சிறந்த வசனங்கள் ஜெயமோகனை ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.கதைக்கு தேவையான மிக இயல்பான வசனங்கள் இவை. பிச்சைக்காரர்களின் கூட்டத்தலைவனின் முகவராக வரும் முருகன் கதாபாத்திரம்,எந்த வகையான மனநிலை கொண்டவன்?சுயநலத்திற்கு கடத்திவந்து,நானும் உன்னைப்போல பிச்சைக்காரிக்கு பொறந்தவந்தான் தங்கச்சி என்று சென்டிமென்டாய் பேசி பிச்சையெடுக்க வைப்பான்.சாராயம் குடித்துவிட்டு வந்து,பிச்சைக்காரர்களுக்கும் சாராயம் வாங்கிக்கொடுத்து,சந்தோசமா இருங்க,வாழ்க்கையில் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறுவான். அவன் தான் பிச்சைக்காரர்களின் கடவுளா பாலா சார்?.போதை அதிகமான பிறகு,பணத்தை அள்ளிவீசி,இதெல்லாம் நீங்க எனக்குப்போட்ட பிச்சை என்று வசனம் பேசுவான்.அவனுடைய பிச்சைக்காரர்கள் அவனுக்கு மட்டுமே சொந்தம்,வேறு யாரும் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சுயநலத்தால் கையாளும் யுக்திகள்தானா இவை. ஒருவேளை கதாநாயகியை காப்பாற்ற நினைக்கிறானா? அல்லது அவள் வாழ்வை சீரழிவில் இருந்து காக்கவா?.இதில் அவ்வப்போது ஆறுதல் வேறு.நல்லவேளை படத்தில் சாமிவேஷம் போட்ட எந்தப்பிச்சைக்காரனையும் யாரும் தூக்கிப்போகவில்லை.இல்லையெனில் வசனகர்த்தாவிற்கு அல்வா சாப்பிடுவது போல வசனம் எளிதாக உதித்திருக்கும். படத்தில் காதாபாத்திரங்களாக நடித்தவர்களின் உழைப்பு நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.கூடவே அவர்களின் எதிர்காலமும்(இனி பூஜாவை கனவிலும் நினைக்க மாட்டார்கள்).இசையென்ற அமைப்பு மட்டும் இல்லாதிருந்தால்,சம்பந்தமில்லாத இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் மனதைப் போல இருந்திருக்கும்.வழக்கம்போல மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.இசைப்பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்.அதிலும் ரமணமாலையில் இருந்து எடுத்து வழங்கியிருக்கிற,”பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்” பாடல் கனிய வைக்கிறது.ஏனோ துரதிர்ஷ்டம் காட்சியமைப்புகள் ஒத்துவரவில்லை.ராஜாசார் தயவுசெய்து இந்தப்பாடல்களை இதுபோன்ற சினிமாவிற்கு எடுத்தாளாமல் இருப்பது நன்று. முடிவில் படத்தில் ஈனப்பிறவியாக வரும் கதாநாயகியின் வாயிலாக, “நான் என்ன பாவம் செய்தேன்?என்னை ஏன் ரட்சிக்கவில்லை?” “எல்லா புகழும் இறைவனுக்கே..என்னைப் போன்றவர்களை படைத்தது அந்த இறைவனுக்கு பெருமையா?” “காளியாத்தா..மாரியாத்தா..இப்படி எந்தச்சாமியுமே என்னைக் காப்பாத்தவில்லையே” போன்ற கேள்விகளை பாலா முன்வைத்து,அவரே தீர்வும் சொல்லி விடுகிறார்.அந்தப்பிறவியில் இருந்து காக்கவும்,அடுத்த பிறவியில் இருந்து விடுவிக்கவும் அவனால் தான் முடியும்.ஈனப்பிறவிகளுக்கு மரணம்தான் தீர்வு.மூர்க்கச்சிந்தனையின் முடிவாக,வாழ இயலாதவர்களுக்கு அவன் அளிக்கும் வரம் மரணம்.அவன்தான் பாலாவின் கடவுள்(ஏனெனில் பிற கடவுள்கள் பிணத்தை உண்பதில்லை). குறிப்பு:சிலபடங்கள் எடுத்து முடிந்த பின்னர் தாமதப்படுவதைப்போல,ஏற்பட்ட தாமதம்.

Saturday 8 December 2012

எனது ட்வீட்டுகளில் சில..

நீ நல்லவன் தான்.ஆனா உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் கெட்டவங்ய #என்னை சுத்தி இருக்கிறவன் சொன்னது ____________________________________________________________________ ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமெனில், இறைவன் தற்காலிகமானவனே.. ____________________________________________________________________ திரைப்படங்களை ஆடியோ கேசட் வழியாக கேட்டு இன்புற்றது எமது சமூகம் மட்டுமே..அவ்வளவு கிரியேட்டிவிட்டி... _____________________________________________________________________ கடவுளுக்கு பூமி மிகவும் பிடித்துவிட்டது போல.ஆகவே குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கிறார்.. _____________________________________________________________________ ஆரம்ப கலவி மிக முக்கியமானது.. ______________________________________________________________________ உயிர் போகும் இறுதி நொடியில் இருக்கும் யோக்கியனாக ,வாழ்நாள் முழுதும் வாழ ஆசை.. _______________________________________________________________________ முடிவு என்பது ஒருமுறைதான்..அதை மாற்றினால் அது இன்னொரு ஆரம்பம் தான்.. ______________________________________________________________________ நீ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கெட்டவன் அல்ல.உனது அம்மாவால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நல்லவனே.. _______________________________________________________________________ எல்லாருக்கும் தெரிந்த போலியான உரையாடல், “எப்படியிருக்கே” “நல்லாயிருக்கேன்” என்பதே.. ______________________________________________________________________ ரத்தத்தை விட கண்ணீர் வலிமையுடையது.. _____________________________________________________________________ சுருங்கிய ரத்ததுளியின் நீட்சியில் பிரதிபலிக்கிறது உனது பிம்பம்.. ____________________________________________________________________ விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது காதல்... ____________________________________________________________________ கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.. கம்ப்யூட்டரை விட நீங்க ஸ்பீடா இருக்குறதா எண்ணி மனச தேத்திக்குங்க..#அவ்வ்வ் ____________________________________________________________________

Sunday 8 April 2012

எல்லா திசைகளும் பாதைகளே..

                            கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும்.ஆனால் அதே கஷ்டம் அளவிற்குமீறி வந்தால்,கடவுளை திட்டத்தான் செய்வார்கள். அதனால்தான் எப்போதும் கடவுளை வணங்கும் கூடலிங்கம்கூட அன்று திட்டிக்கொண்டு இருந்தார்.இதேபோன்ற ஒரு சூழ்நிலைதான் நாற்பது வருடங்களுக்குமுன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரத்தூண்டியது. அன்றைக்கு கூடலிங்கம் தனிமனிதன்.விட்டுச்செல்ல ஒன்றுமில்லாததால் நினைத்தவுடன் எங்கும் செல்லும் மனோநிலை இருந்தது.பெரும்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகளை எல்லாம் இழந்து,உயிர்வாழ ஊரைவிட்டு, நாட்டைவிட்டு  நடப்பது நடக்கட்டும் என்றுதான்,அன்று இலங்கை வந்தார்.வந்தபின் உழைத்து மீண்டும் புது உறவுகளை உருவாக்கி, சமுதாயத்தில் முக்கியப்புள்ளி என்ற நிலைக்கு வந்தபின்பும் கஷ்டம் மட்டும் விட்டு விலகவில்லையே..கண்ணுக்கு கண்ணான மனைவி,கவலைகள் போக்க குறைவில்லாத குழந்தைகள் எட்டு,அரண்மனை போன்ற சொந்தவீடு, விவசாயம் செய்ய குளத்துடன் கூடிய நாற்பது ஏக்கர் நிலம்,நூற்றுக்கணக்கான மாடுகள் இவைகளெல்லாம் தனது சுயஉழைப்பால் வாங்கி வாழ்ந்துவந்தாலும், இப்போது உள்ள நிலை மிகவும் அபாயகரமானது.இந்த பூமியில் எந்தநேரம் யுத்தம் வருமோ?என்ன நடக்குமோ?என்ற பயத்துடனே வாழும்நிலை மிகுந்த கஷ்டம்தான்.
                                    வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மற்றும் மகள்கள்தான் அவரது கவலைக்கு அடித்தளமிட்டவர்கள்.தினமும் அவர்கள் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் கூடலிங்கத்திற்கு சுத்தமாக உடன்பாடில்லை.தமிழீழம் பற்றி தீவிரமாக பேசும் நபர்களுடன் தனது பிள்ளைகள் வைத்திருந்த தொடர்பால்,தனது குடும்பம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.அதனாலேயே தற்போது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் கலந்தாகிவிட்டது.இனி எப்படி செல்வது என்பதைப்பற்றிய யோசனைதான்.கள்ளத்தோணி மூலமாகவாவது போய்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.இரு தினங்களுக்குப்பின் ஒரு தோணி கிளம்புவதாகவும், அதில் இடமிருந்தால் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார் அவருடைய நண்பர்.சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வெறும் மனிதராக செல்லும்நிலையில் இருந்தாலும், தன் பிள்ளைகளை திசைமாறவிடாமல்  கரைசேர்க்கும் முயற்சியில் இருந்தார் கூடலிங்கம்.இரண்டு நாட்களுக்குப்பின் அந்த படகில் இடமில்லையென்று நண்பர் சொல்லிவிட்டார்.ஆனால் மறுநாள் இரவு வேண்டிய ஒருவரின் படகு தமிழ்நாட்டிற்கு செல்வதாகவும்,அதில் அவர்களை ஏற்றி விடுவதாகவும் உறுதிகூறி,எப்போது,எங்கே வரவேண்டும் என்ற விபரத்தையும் சொன்னார் கூடலிங்கத்தின் நண்பர்.
                                                       மன்னாரில் இருந்து தலைமன்னாருக்கு மாட்டுவண்டியில் சென்று,இரவு அங்கு இருந்து படகில் கடல்வழியாக தமிழ்நாட்டை அடைவதுதான் திட்டம்.அதன்படி மறுநாள் மாலையில் தனது மனைவி,பிள்ளைகளை,கையில் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல முடியுமோ அவைகளை மட்டும் எடுக்கச்சொல்லி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டுக்கதவைப் பூட்டினார்.திரும்பாத வீட்டிற்கு பூடு ஒருகேடா?என புலம்பிக்க்கொண்டே,மாட்டுக்கொட்டகைக்கு சென்று,கதவைத்திறந்து மாடுகளை வெளியேற்றிவிட்டு,”எங்கேயாவது சென்று உயிர்வாழுங்கள்” என்றுகூறி,இத்தனைநாள் உழைத்த விவசாய நிலத்தை கடைசியாக பார்த்தவாறே நின்றுவிட்டார்.பிள்ளைகள் எல்லாம்,”அப்பா..சீக்கிரம் வாருங்கள்.இரவு நெருங்கிவிட்டது”என்று கத்தினர்.கூடலிங்கம் அவர்களை திரும்பிப் பார்த்தார்.அவர் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. அவர் நிலத்தைப்பார்த்து கலங்கினாரா?பிள்ளைகளைப் பார்த்து கலங்கினாரா? என்பதே புதிர்தான்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததைப்போலவே, தற்போது போவதை எண்ணி வருந்திக்கொண்டு கிளம்பினார் அவர்.
                                      தலைமன்னாருக்கு சென்று சேரும்போது,நன்றாக இருட்டிவிட்டது.அனைவரும் கீழே இறங்கி மாட்டுவண்டியை கடற்கரையிலேயே விட்டுச்சென்றனர்.அங்கு கூடலிங்கத்தின் நண்பர் நின்றிருந்தார்.அப்போது செல்லும் படகில் படகுக்காரரின் சகோதரிகள் இருவர் உடன் வருவதாகவும் கூறினார் அவர்.எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.சற்றுநேரத்தில் படகுக்காரர் வந்தவுடன் அனைவரையும் படகில் ஏறி உட்காரச்சொன்னார்.சுமார் அறுபது பேர் இருக்கும்.அவரவர் கையில் ஆளுக்கொரு பையை வைத்திருந்தனர்.அனைவரும் உட்கார்ந்தபின்,படகு நகர ஆரம்பித்தது.கூடலிங்கத்தின் நண்பர் அனைவருக்கும் கையை ஆட்டி, விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.பயணம் ஆரம்பித்து சிறிதுதூரம் செல்லும்போதே,அலைகள் ஆளுயரத்திற்கு வந்து கொண்டிருந்தன.யாரும் சத்தம் போடக்கூடாது என்று படகுக்காரர் சொல்லியிருந்தார்.அதனால் படகு அலையில் ஏறி இறங்கும் போதெல்லாம் அனைவரும் மூச்சைப் பிடித்துக்க்கொண்டு  உட்கார்ந்திருந்தனர்.அப்போது படகில் சிறிதுநீர் ஏறியதால் பளு அதிகமாக இருந்தது.உடனே படகுக்காரர், எந்தக்கேள்வியும் கேட்காமல் அனைவரின் கையில் இருந்த பைகளையும் கடலில் வீசியெறிந்தார்.யாரும் எதுவும் பேசவில்லை.உயிர் பிழைத்தால் போதும் என்று மட்டும்தான் இருந்தனர்.கண்முன்னே சிலமீட்டர் தூரத்தில் பனைமர உயரத்திற்கு பெரிய அலை வந்து கொண்டிருந்தது.அனைவரையும் நன்றாக பிடித்துக் கொள்ளச் சொன்னார் படகுக்காரர்.அடுத்த நிமிடம் அந்த பெரிய அலை அருகில் வந்துவிட்டது.எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அடுத்த நொடி தாழ்வாக இருந்த படகு செங்குத்தாக உயரத்திற்கு சென்றுவிட்டது.கடற்பரப்பு விரிவாக இருளைப் போர்த்திக்கொண்டு தெரிந்தது.சடாரென்று படகு கீழிறங்கி, வயிற்றில் புளியைக் கரைத்தது.இப்படி ஒவ்வொரு அலையையும் தாண்டி,பயணித்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஆகியிருக்கும்.படகு தென்கடல் ஓரமாக வந்து கொண்டிருந்தது.அப்போது படகுக்காரர் யாரும் வெளிச்சம் தரும் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்க்கொண்டார்.ஏனென்றால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும், அவர்கள் கண்ணில் சிக்கினால் சுட்டுக்கொன்று விடுவார்கள் .எல்லாரும் அதன்படியே இருந்தபோது படகு ஒருபெரிய கப்பல் அருகில் வந்துவிட்டதை படகுக்காரர் உணர்ந்தார்.
                                                       அது இலங்கை கடற்[படையின் கப்பல் அவர்களும் விளக்கை அணைத்துவிட்டு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால் தூரத்தில் வரும்போது தெரியவில்லை.அருகில் வந்தவுடன் கடற்படையில் ஒருவர் சிகரெட் பிடித்ததால் படகுக்காரர் பார்த்து விட்டார். வேறுதிசையை நோக்கி படகை செலுத்தினாலும் நகர மறுத்துவிட்டது.படைக்கப்பலில் ஒருவர் படகைப் பார்த்துவிட்டார்.உடனே அவர் மற்ற வீரர்களுக்கு சிங்கள மொழியில் ஆணையிட ஆரம்பித்தார்”அவர்களை சுடுங்கள்..அவர்களை சுடுங்கள்.”. அவ்வளவுதான்..படகில் இருந்த எல்லாரும் நீரில் குதித்து விட்டனர். படைக்கப்பலில் இருந்து விளக்கொளியும் அதைப்போன்றே தோட்டாக்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கூடலிங்கம் குடும்பத்தாரும் ,படகில் வந்த பயணிகளும் தென்கடல் அலையடித்து ஒதுங்கிய மணல்திட்டுகளில் இருந்த கடற்தாவரங்களுக்கு இடையே மறைந்து கொண்டனர்.கப்பலின் விளக்கு வேறுதிசையில் தேடும்போது மணற்திட்டு வழியாக நகர ஆரம்பித்தனர். அந்த மணல்திட்டுகளின் கரையோரப்பகுதியில் கடல் நீர் நெஞ்சளவு இருந்தது.கடற்படையின் தாக்குதலில் பாதிப்பேர் உயிரிழந்து விட்டனர்.கணவன் இறந்ததை மனைவியும்,குழந்தை இறந்ததை தாயும் உணரக்கூட அவகாசமில்லாத நிலை அது.இதையெல்லாம் பார்த்த பிறருக்கு,அவர்களின் உயிர்மீதான வேட்கை அதிகரித்தது.வேகமாக கடலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போதுதான் முந்தினநாள் கிளம்பின படகு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தார்கள். ஆட்கள் தப்பியிருப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.இன்று நாம் இருக்கும்நிலையில்தான் நேற்றும் அவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்தவாறே வேகமாக நடந்தனர்.
                                                கடலுக்குள் இருந்து கரையை நோக்கி நடக்கும்போது கால்களில் சங்குகளும்,அதைப்போன்று இருந்த பொருட்களும் கால்களில் குத்தின.அடுத்து காலகளில் சில பிணங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. அவ்வளவுதான்..அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.பயத்தில் உடல் உதறியது.ஓர் அடிகூட நகர முடியவில்லை.நேற்றைக்கு வந்தவர்களின் உடல்களை மீன்கள் உண்டு, மீதியாக கடலுக்குள் புதைந்து கிடந்தன.ஆனால் என்ன செய்வது?உயிர் இருக்கும் வரை பிழைப்பதற்கான முயற்சிகளையாவது செய்வோம் என பயணித்தனர்.படகுக்காரரின் சகோதரிகள் இருவரும் உடனிருந்தனர்.அங்கு இருந்தவர்கள் அவர்களின் அண்ணன் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்கள்” சீக்கிரம் வந்துவிடுவார்” என்று கூறியதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.அப்போது படகுக்காரர் மட்டும் தனியாக சென்று படகின் இஞ்சினை நிறுத்திவிட்டு, படகினை இழுத்துக்கொண்டே வந்தார்.பின்னர் எஞ்சியவர்கள் படகில் ஏறிஅமர்ந்து கொண்டு அதிகாலை வேளையில் கரையை நெருங்கினர். ராமேஸ்வரம் கோயில் கோபுரவிளக்கு உயிருக்கு ஒளியூட்டியது. சிறிதுநேரத்தில் படகில் இருந்த அனைவரும்  கரையில் வந்து சேர்ந்தனர். உடனே தமிழக ரோந்துப்படைகள் அவர்களை சுற்றிவளைத்து,பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.பின்னர் கூடலிங்கத்தின் குடும்பத்தார் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு ஊர்மக்கள் பழைய உடைகளை அவர்களுக்கு கொடுத்து உதவினர்.அகதிகளின் முகாமைவிட்டு அவர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று தடை போடப்பட்டிருந்தது.கூடலிங்கம் தான் பழைய நிலையைவிட மோசமாகிவிட்டதை உணர்ந்தார்.இப்போது தனது சொந்தநாட்டிலேயே அகதியாக இருப்பதை எண்ணி நொந்து கொண்டார். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் பாதைகளே என்ற நம்பிக்கை,அவர் கண்களில் கம்பீரமாக இருந்தது.

Wednesday 4 April 2012

நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்

                                     நான் காற்றிலே மிதப்பது போன்ற உணர்வு என்னை பரவசமடையச்செய்து கொண்டிருந்தது.எப்போதிருந்து அந்த உணர்வு எனக்கு வந்தது என்று சரியாக சொல்லமுடியவில்லை.சில நாட்களாக வலியுடன் போராடிக்கொண்டிருந்த நான்,நேற்றிரவு வழக்கம்போல் தான் வலியுடன் தூங்கினேன்.மறுநாள் காலை பரவசநிலையுடன் பார்த்தால்,எனது உடலைச்சுற்றி அம்மா,அக்கா,அண்ணன் எல்லாம் அழுதுகொண்டிருந்தனர். அப்போதுதான் நான் இறந்து விட்டிருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். அடடா!என்ன ஆனந்தநிலை!பறப்பது போன்றே இருந்தது.இவ்வளவு நாளும் சுமந்து வந்த உடலை,பாரத்தை இறக்கி வைத்துவிட்டதால்,மிகவும் லேசாக இருப்பதாக உணர்ந்தேன்.ஒருவேளை நான் உயிரோடு இருந்ததே இப்படி ஒரு பரவசநிலையை அடையத்தானோ?என நினைத்தேன்.
                                    வீட்டிற்குள் ஆட்கள் நிறைந்து இருந்தனர்.அம்மா இடைவெளியின்றி அழுது கொண்டிருந்தாள்.நான் மிகுந்த சங்கடத்துடன் மற்றவர்களையும் பார்த்தேன்.அக்காவும்,அண்ணனும் மிகவும் வருந்தித்தான் போனார்கள்.தன்னில்பாதியை இழந்ததால் வந்த வருத்தம்தான்.தந்தையை தேடிப்பார்த்தால்,தூணில் சாய்ந்து உட்கார்ந்து வெறுமையை  நோக்கிக் கொண்டிருந்தார்.எல்லாமே வெறுமை என்பதை இழப்பு வரும்போதுதான் உணர்ந்துகொள்ள முடியும்போல.அய்யோ!எவ்வளவு சிரமத்தினை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன்.ஒரு காலகட்டத்தில்,அப்போது இருக்கும் மனநிலையில் நாம் சரி என்று செய்த தவறான செயல்கள்,பின்னாளில் நமது மனம் பக்குவப்படும்போது,அந்த செயலை எண்ணி சொல்லமுடியாத அளவிற்கு வேதனையைத் தருகிறது. அழுதேன்.இறந்த என் உடலைப்பார்த்து அவர்கள் அழுகிறார்கள்.அதனால் பாதிப்படைந்து இருக்கிற அவர்களின் மனதைப்பார்த்து  நான் துக்கப்படுகிறேன். என் உடலைப்பார்க்க உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.பார்க்க வந்தவர்கள் பார்க்காமலேயே வெளியில் உட்கார்ந்திருந்தனர். இதுவரை நான் நல்லவர்,கெட்டவர் என்று வரையறுத்து வைத்திருந்தவர்களின் உண்மைநிலையைக் காணக்கூடிய வாய்ப்பு, அந்தநிலையில் எனக்குக் கிடைத்திருந்தது.
                                              என் உடலைப்பார்க்க வந்திருந்த பலரும் என்னைப்பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒருசிலர் இவன் நல்லவன் என்றுகூறி,நான் எனக்குத்தெரியாமலேயே செய்த சில விஷயங்களைக் கூறினர்.சிலர் நான் நல்லவை என்று நினைத்து செய்ததைக்கூறி,இவன் சரியானஆள் இல்லை என்றும் கூறிக்கொண்டு இருந்தனர்.இப்படியெல்லாம் ஆளாளுக்கு பேசிக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மௌனமாகவே உட்கார்ந்திருந்தனர்.அவர்கள் மனமோ வேறுஒரு பாதைக்கு போய்க்கொண்டிருந்தது.வந்திருந்தவர்களில் சிலர் வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் ஏதோ கோபத்துடன் வந்திருந்தனர்.அவர்களின் மனமோ மௌனமாக இருக்கும்போது,கோபத்தை ஒளித்துவைத்து பழிவாங்குதலைப்பற்றியே  சிந்தித்துக் கொண்டிருந்தது.கோபத்தைக் கொல்லும் மனிதன் குரோதத்தை வளர்த்துக்கொள்வது எனக்கு அப்போதுதான் புரிந்தது.ஒரு ஓரமாக என் அக்காமகள் பூனையிடம் என் உடலைக்காட்டி, நான் இறந்து விட்டதாகக்கூறி அழுத முகத்துடன் இருந்தாள்.நான் செய்த செயல்களை அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்.பல விஷயங்கள் மிகவும் தாமதமாகப் புரிந்தது.எந்த ஒரு செயலை செய்யும்போதும் மிகவும் கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.ஏனெனில் நாம் செய்யும் செயல்களே நமக்கு எதிரியாகவும்,நாம் சொல்லும் சொற்களே நமக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படக்கூடியவையே.
                                               சிறிதுநேரத்தில் என்னுடலை குளிப்பாட்ட வேண்டும் என்றார்கள்.நான் படுக்கையில் இருந்தபோது என் அம்மாதான் என்னைக் குளிப்பாட்டுவாள் மன்னிக்கவும் சுத்தப்படுத்துவாள்.ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து,அதில் துணியை நனைத்து உடம்பெல்லாம் துடைத்து விடுவாள்.இன்று பலர் மத்தியில்,ஒருகுடம் தண்ணீரை எடுத்துவந்து என்னுடலின் மீது அப்படியே சாய்த்துவிட்டனர்.என் அம்மா ஓவென்று கதறினாள்.வெளியில் சென்றிருந்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டின்முன் கூடிவிட்டனர்.அப்போதே எனக்குப் புரிந்தது.என் உடலை வெளியேற்ற தயாராகி விட்டார்கள் என்று.சிறிதுநேரம் கழித்து,எல்லாரும் என் உடலை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்கு கொண்டுசென்றனர்.போகும்போதே,என்னுடன் வருபவர்கள் எல்லாம் குளிக்கவேண்டும் என்று இறைவன் நினைத்தானோ என்னவோ மழை வந்தது.பலர் என் உடலைவிட்டு ஓடி ஒதுங்கினர்.ஒருசிலர் குடையில் தன்னை மறைத்துக் கொண்டனர்.வானம் மனிதனை சுத்தப்படுத்தவும், சுகப்படுத்தவும் தண்ணீரை சல்லடைமூலம் சலித்துத்தருகிறது. ஆனால் இந்த மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.கொஞ்சநேரம் கழித்து என் உடலை மேலும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு குழிதோண்டி வைத்திருந்தனர்.
                                            நான் எப்போதுமே என் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிவிட்டாலே பத்துமுறை கழுவுவேன்.ஆனால் இப்போது சேறு போன்று இருந்த மண்குழிக்குள் என் உடலை வைத்து மூடினர்.எனக்குரிய சொந்த இடம் அதுதான் என்று சொல்லிக்கொண்டனர்.நான் முன்னமெல்லாம்,எவ்வளவோ அதிகாரம் பண்ணவேண்டும்,நிலங்கள் சொத்துக்களைச் சேர்த்து வாழவேண்டும் என்று எண்ணியதுண்டு.ஆனால் இப்போது இவர்களாகவே ஒரு குறிப்பிட்ட இடத்தை எனக்கு தானமாகக்கொடுத்து,என் ஆசையினை முட்டிவிற்கு கொண்டுவந்து விட்டனர்.இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது என்று எனக்குப்புரிந்தது.பின்னர் எல்லாரும் அவன் மறைந்துவிட்டான் என்று கூறிக்கொண்டு சென்றுவிட்டனர்.ஆனால் நான் மட்டும் பரவசநிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறேன்.நான் இருப்பதும், அவர்களைப் புரிந்து கொண்டிருப்பதும் யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் நான் எங்கிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனாலும் நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------
                நீ இந்த பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன்தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச்சுரக்க வைத்தவன் இறைவன்.நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட, அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.
                                                                -தாகூர்

Tuesday 3 April 2012

அடுத்தவன் டைரி

                  எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதில்(பாடப்புத்தகத்தை தவிர்த்து) ஆர்வம் அதிகம்.அது நாளடைவில் கையில் கிடைக்கும் பேப்பர்களையெல்லாம் படிக்கும் பழக்கமாகிவிட்டது.மளிகைகடையில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில்,வாடிக்கையாளர்கள் இல்லாத சமயங்களில் பொட்டலம் மடிக்க வைத்திருக்கும் காகிதங்களை எல்லாம் படித்த பின்னரே உபயோகப்படுத்தும் அளவிற்கு வந்துவிட்டது.அன்றும் அப்படித்தான், மதியநேரம் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதபோது,கடைக்கு வந்திருந்த பழைய நோட்டு புத்தகங்களை பிரித்து வைத்துக்கொண்டிருந்தேன். அவைகளுடன் சேர்ந்து,சரியாக முப்பத்தைந்து  வருடங்களுக்கு முந்தைய டைரி ஒன்று இருந்தது.அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப்பற்றி அறிய முற்படுவது அநாகரிகம் என்றாலும்,அதில்தானே நமக்கு ஆனந்தம்.மேலும் கிடைத்ததை எல்லாம் படிக்கும் பழக்கம் வேறு.அது மட்டுமல்ல,இந்த கிராமத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னரே ஒருவர் டைரி எழுதியிருக்கிறார் என்றால் மிகுந்த ஆச்சரியமாகத்தான் இருந்தது.சும்மா இருப்பேனா?அதை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.அதை எழுதியிருந்தவர் ஒரு ஆண்.அவரை எழுதவைத்திருந்தது ஒரு பெண்ணும்,அவள் நினைவுகளும்.
                                          அந்த டைரியின் தொடக்கத்திலேயே எழுதியவருக்கு போதுமான எழுத்தறிவு இல்லை என்பது தெரிந்தது.ஆரம்ப வகுப்பில் குழந்தைகள் எழுதுவது போன்று கோணல்மாணலாக எழுத்துக்கள் இருந்தன. புள்ளிவைக்க வேண்டிய இடங்களில் வைக்காமலும்,துணையெழுத்து போடவேண்டிய இடங்களில் போடாமலும் இருந்தார்.மேலும் குறிலுக்கும், நெடிலுக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதியிருந்ததால் மிகுந்த வேடிக்கையாக இருந்தது.இருந்தாலும் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவாகப் புரிந்தது.ஒரு மனிதனின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதா என்ன?. டைரியில்,அவர் அந்தப்பெண்ணை பார்த்ததில் இருந்து துவங்கியிருந்தது. அவளைப்பார்த்து சிரித்தபோது,அவள் சுற்றிமுற்றி பார்த்து,யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, திருட்டுத்தனமாகச் சிரித்ததை அவருக்குரிய எழுத்தில் அழகாக எழுதியிருந்தார்.கிராமப்பெண்ணின் வெட்கத்தையும்,அவளை வெட்கப்பட வைத்த தன்னையும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.காட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தனக்காகவே ஈடுபாட்டுடன் செய்து, அவள் கொண்டுவரும் பதார்த்தங்களைப்பற்றியும்,அதனை அவளுக்கே தான் ஊட்டி மகிழ்ந்ததையும் எண்ணி பூரிப்படைந்திருந்தார்.இவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடிய டைரியை இனி நீங்களே படியுங்கள்...
                                             “சுப்பையா என்பது என்பெயர்.எல்லாரும் என்னை சுப்பு என்றுதான் அழைப்பார்கள்.நண்பர்கள் மட்டும் கேலியாக சூப்பு என்று கூப்பிடுவார்கள்.ஆனால் என்னைப்பிடித்த அவள் மட்டும் சூப்பரு என்று கூறிமகிழ்வாள்.எனக்கு கொலுசு சத்தம் என்றாலே பிடிக்காது.சல்லிட்டு மாட்டுக்கு சலங்கை போட்டது மாதிரி என்று சலித்துக்கொள்வேன்.ஆனால் இப்போது?அவள் கொலுசுச்சத்தம் கேட்டால்தான் கொஞ்சநஞ்ச தூக்கமே வருகிறது.காட்டில் கடுமையாக வேலைசெய்து கொண்டிருந்தாலும்,அவள் வந்த உடனே, உடலில் களைத்திருக்கும் செல்களெல்லாம் அப்படியே செத்து உதிர்ந்துவிடும்.அப்போதுதான் காட்டில் நுழைந்தவன்போல சுறுசுறுப்ப்பாகி விடுவேன்.அவளுடன் பேசி,பழக ஆரம்பித்ததில் இருந்தே எவ்வளவு நாட்கள் எப்படி ஓடின என்று கணக்குப்பார்க்க முடியவில்லை.
                                                                     எங்கள் ஊரில் சினிமா கொட்டகையில் படம் ஓடுவதில்லை.அதனால் பக்கத்து ஊரான பண்ணைப்புரத்திற்குத்தான் சினிமாவிற்குப்போவோம்.இரவில் பஸ் கிடையாது என்பதால், வரும்போது ரெண்டுமைல் நடந்துதான் வருவோம்.அன்றொருநாள், அவள் தன்குடும்பத்தினருடன் சினிமாவிற்குப் போகிறாள் என்றசேதி தெரிந்தவுடன்,நானும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டேன். இடைவேளையில் யாருக்கும் தெரியாமல் நான்கொடுத்த கடலைஉருண்டை,சோளப்பொரியை ஆசையுடன் வாங்கிக்கொண்டாள். படமும் முடிந்தது.எனக்கு முன்னால் அவள் குடும்பத்தாருடன் நடந்துபோய்க்கொண்டு இருந்தாள்.கடைசியாக நான் சைக்கிளை மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தேன்.திடீரென்று அவள் கால் சறுக்கி,சுளுக்கு பிடித்ததுபோல நொண்டிநொண்டி நடந்தாள்.அந்தநேரம் பார்த்து நான் பெல்லை அடித்தபடியே சைக்கிளில் வந்தேன்.அவள் அம்மா,”தம்பி இவளை வீட்டில் விட்டுவிடு.பாவம் இவளால் நடக்க முடியவில்லை”என்றார்கள்.நானும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சரி என்றேன்.அவள் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபின் கொஞ்சதூரம் போயிருப்போம்.அவள் சைக்கிளை நிறுத்தச் சொன்னாள்.என்ன என்று கேட்டதற்கு அவள்,”சுளுக்கெல்லாம் ஒன்றும் இல்லை.உங்க கூட வரணும்னுதான் சும்மா பொய் சொன்னேன்.இப்படி சைக்கிள் பின்னாடிதான் உட்காரணும்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்”என்றாள்.”அடிப்பாவி இதுக்குத்தான் இந்த நாடகம் போட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே,அவளை முன்னால் உட்காரவைத்து சைக்கிளை நகர்த்தினேன்.அவள் அருகாமை தந்த வெப்பம்,அவள் கூந்தல் மணம்,அவளின் கொஞ்சும் பேச்சு இவையெல்லாம் அவளின்பால் என்னை மேலும் ஈர்த்தன.இருவரும் காதலிப்பதாக,மிக ரகசியமாக இருட்டுக்குள் பேசி மகிழ்ந்தோம்.அந்த தருணத்தில்,என்னைப்போல யாரவது இவ்வுலகில்  மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா என்றால்,அது சந்தேகம் தான்.பின் அவளை வீட்டில் விட்டு,நான் போய் தூங்கினேன்.மறுநாள் காலை நேற்று நடந்ததில் எது கனவு,எது நிஜம் என்று தெரியாத அளவு குழம்பியிருந்தேன்.
                                             அன்றுமாலை,அவள் வீட்டுப்பக்கம் போனேன்.அப்போதே அவளின் அப்பா என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்.சிறிதுநேரம் கழித்து அவரே என்னிடம்,”இனிமேல் இந்தப்பக்கம் வராதே,அவளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கண்ணை மட்டும் எடுத்துவிடுவேன்”என்று கடுமையாகச்சொன்னார்.நாங்கள் நேற்று இரவு பேசியது எப்படியோ இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.இருட்டில்தான் புலன்கள் அதிக விழிப்புடன் இருக்கும் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது.அவளுக்கு சரியான அடிஉதையாம்.ஆனால் அவள் அசராமல் என்னைத்தான் கல்யாணம் செய்வேன் என்று கூறினாளாம்.பக்கத்துவீட்டு பாட்டி சொன்னாள்.நாளை பார்க்கலாம் என்றுஎண்ணி வீட்டிற்கு வந்து, என்ன பண்ணலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்”.
                                         அந்தநேரத்தில் கடைக்கு வாடிக்கையாளர்கள் வரவும், அந்தப்பக்கத்தின்மூலையை மடித்துவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தேன்.மனம் முழுவதும் சுப்பையாவின் காதல் நினைவுகளிலேயே உழன்றது.தான் அறிந்த எழுத்தின் வாயிலாக,தனது வாழ்வில் நடந்ததை உணர்ச்சிபூர்வமாக கூறும் அவரது காதலை எண்ணி மெச்சிக்கொண்டேன்.மிச்சத்தை இரவு படிக்கலாம் என்று இருந்துவிட்டேன்.இரவு எப்போதுவரும் எனக்காத்திருந்து, எல்லாப்பொருட்களையும் கடைக்குள் எடுத்து வைத்துவிட்டு, டைரியைப் புரட்டினேன்.அதில்....
                                             ” விடிந்ததும் வீட்டிற்கு வந்த முதல் செய்தி அந்தப்பெண் தீக்குளித்துவிட்டாள் என்பதுதான்.ஒருநிமிடம் இதயம் தனது வேலையை மறந்துவிட்டது.எழுந்து நின்றால் உடலில் எலும்புகளே இல்லை என்னும் அளவிற்கு தளர்ந்துவிட்டது.அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.கண்களில் தரைதாரையாகக் கண்ணீர்.எண்ணம் அவளைப்பார்க்க வேண்டும் என்றது. அவள் தீவைத்துக்கொண்டபின் சுய உணர்வோடுதான் இருந்திருக்கிறாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்.அவளைப்பார்க்க சைக்கிளை எடுத்து மிதித்தேன்.அடுத்த நிமிடம் அவள் முன்னால் இருந்தேன். அவள் சொந்தக்காரர்கள் எல்லாம் ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அவளோ கூந்தல் மணம் இழந்து,கொஞ்சும் பேச்சு இழந்து,கொல்லும் சிரிப்பு இழந்து கரிக்கட்டையாக கிடந்தாள்.தீயை தீ எரிக்க முடியாது என்பதால்,அவள் கண்கள் மட்டும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. அவள் என்னிடம், ”உன்னைக்கல்யாணம் பண்ணினால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் செத்துவிடுவோம் என்று சொன்னார்கள்.அவர்களுக்கு சாதிதான் முக்கியமாம்.எனக்கு நீதான் முக்கியம்.நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்.அதான் இப்படி செஞ்சேன்”என்றாள்.எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது பிறப்பைக்குறித்த குறையை எப்படி தீர்த்துக்கொள்வது? யாராவது விளக்கம் கூறமுடியுமா? என்று உரக்கக் கத்திவிட்டு வீட்டிற்கு வந்தேன்.இரவும் பகலும் எப்போது வந்தது?எப்போது போனது?என்றே தெரியவில்லை.இரண்டு நாட்களாகி விட்டன.அவள் இறந்து விட்டாளாம்.நான் மட்டும் என்ன வாழ்ந்து கொண்டா இருக்கிறேன்.இதுவரை நான் கேள்விப்பட்டிருந்த,நடைபிணம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே நான் மாறிவிட்டேன்.இனிமேல் எந்த ஆதாரத்தோடு இந்த பூமியில் வாழ்வது?”
                                       இத்துடன் அந்த டைரி முடிவடைந்திருந்தது.மனதில் ஏக கனம்.அடுத்தவர் டைரியை ஏன் படிக்கக்கூடாது என்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது.சுகங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கின்ற நாம் துக்கங்களை மறுத்து விடுகிறோம்.அதனால்தான் நாம் நாமாகவே இருக்க முடிவதில்லை.யாரைச் சந்திக்கிறோமோ,அவர்களின் மனநிலைக்கே, அவர்களாகவே மாறிவிடுகிறோம்.அந்தநிலைதான் எனக்கும்.சுப்பையாவின் எண்ண ஓட்டத்தில் நானும் கலந்து விட்டேன்.தூக்கம் வராத இரவு வாழ்வின் இறுதிநாள்வரை காத்திருந்தது போலாகி விட்டது.விடிந்ததும் முதல் வேலையாக டைரியை எடுத்துக்கொண்டு,சுப்பையாவின் முகவரிக்குச் சென்றேன். “இந்த வீட்டில் சுப்பையா என்று யாராவது இருக்கிறர்களா?” என்றேன்.ஒரு பெண்,”இல்லீங்க,எங்களுக்கு முன்னாடி யாராவது இருந்திருக்கலாம்.எனக்குத் தெரியாது”என்றாள்.புதுப்பெண் போல தெரிந்தாள். யாரிடம் கேட்கலாம் என்று எண்ணியபோது,நான்குவீடு தள்ளி இருக்கும் மேரிப்பாட்டி தென்பட்டார்.அவரிடம்,”முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் இந்தத்தெருவில் இருந்த சுப்பையா எங்கே?”என்றேன்.அப்போதுதான் அந்தப்பாட்டி,”ஆமாம்ப்பா இருந்தான்.அவன் காதலிச்ச பொண்ணு தீ வச்சுக்கிட்டு செத்துப்போயிட்டா.அந்த பொண்ணு செத்த நாலுநாளிலேயே அவனும் செத்துப்போயிட்டான்”என்று சொன்னார்.என் கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது.அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை.

குறிப்பு:இந்த சம்பவம் தேனி மாவட்டம்,தேவாரத்தில் நடந்தது.

Monday 26 March 2012

கோம்பை வெள்ளை

          ரங்கசாமி பாட்டையாவிடம் கதைகேட்டால்,நம்மைச்சுற்றி என்ன நட்க்கிறது என்றேதெரியாது.அவர் சொன்னால்தான் தெரியும் நமது வாயில் கொசு குடும்பம் நடத்துவது.அதன்பின்னர் வாயைமூடிக்கொள்ளவும் அவகாசம் தருவார்.அப்பேர்ப்பட்ட கதைசொல்லி அவர்.எப்படி இவ்வளவு நன்றாக கதைசொல்லுகிறீர்கள் எனக்கேட்டால், கதைசொல்லுவதில் அவருக்கே வாத்தியாராக சின்னச்சாமி கவுண்டரைச் சொல்லுவார்.அவர் சிறுவயதில்  மாடுமேய்க்கும்போது சின்னச்சாமி கவுண்டர் கதைசொல்ல ஆரம்பித்துவிட்டால்,மாடுமேய்ந்து, தானாக வீட்டுக்குப்போனபிறகுதான் சுயநினைவே வருமாம்.அவரோட டிரெய்னிங்குல்ல சும்மாவா என்று பெருமிதமாக கூறுவார்.போன தைப்பொங்கலுக்கு ஊருக்குப்போனபோது ஜல்லிக்கட்டைப்பற்றி பேச்சு திரும்பியது.ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையைக்கேட்டவுடன் ரங்கசாமி பாட்டையாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,புத்துணர்வு எல்லாமும் ஒன்றாக இருந்தது.உடனே அவர் ஜல்லிக்கட்டைப்பற்றி பலவிஷயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.அதில் ஒன்றுதான் கோம்பை வெள்ளை.அது ஒரு ஜல்லிக்கட்டுகாளை என்பது மட்டுமல்ல.கோம்பையின் அடையாளம் என்றும் கூறுவார்.இனி அவர் சொன்னது...
                            மாடு வளர்ப்பதில் நேக்கு தெரிந்தவர்கள் நம்மூரு கவுண்டமாரு.வளர்ப்புன்னா அப்புடி ஒரு நேர்த்தியாக இருக்கும். அப்போவெல்லாம் நம்ம ஏரியாவுல ஊர் ஊருக்கு ஜல்லிக்கட்டு நடக்கும்.பக்கத்து ஊரு பல்லவரயன்பட்டியில் அந்தவருசம் நடந்த ஜல்லிக்கட்டுல ஒருசிறு கன்னுக்குட்டி பலபேரை குத்திப்போட்டுக்கிட்டு இருக்குன்னு ஒரே பரபரப்பு.பலஊருகளில்  இருந்து மாடுபிடிக்க வந்தவர்கள் எல்லாம் அதைப்பார்த்து தெறிச்சு ஓடுனாங்க.ஜல்லிக்கட்டு நடத்திய பல்லவராயன்பட்டிக்காரர்களுக்கு கடுமையான கோபம்.கோம்பைக்காரன் மாட்டைப்புடிக்கிறியா இல்லியான்னு சத்தம் போட்டார்கள்.அப்போதான் பலருக்கும் தெரியுது அது கோம்பைமாடுன்னு.சித்துக்கன்னுக்குட்டியா இருந்தாலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு.முட்டையில இருக்குற அளவுக்கு வெள்ளைகலர்ல வெயில்ல பளபளன்னு,பெண்கள் முடியில் சிக்கல் எடுக்கும் சிணுக்கருக்கி போல கூர்மையான செந்நிற கொம்புகளுடன் புகுந்து விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்துக்குமேல்  பல்லவராயன்பட்டி ஊர் ஆட்களெல்லாம் சேர்ந்து அந்த கன்னுக்குட்டியை,ஒருபக்கமாக இருந்து விரட்டி,அருகில் இருந்த தாழங்குளத்தில்,நிறைந்திருந்த தண்ணீரில் இறக்கி விட்டார்கள்.அந்த கன்னுக்குட்டி நீந்தி கரைக்கு வரும்போதெல்லாம்,கரையில் இருந்த ஆட்கள் கம்பு,கல்லை வைத்து அடித்து மறுபடியும் தண்ணீருக்குள்ளேயே விரட்டி விட்டார்கள். அப்பொழுதுதான் மாட்டுக்கு சொந்தக்கார கவுண்டர் சண்டைக்கு போனார்.அவரையும் ஏறுக்குமாறா பேசி விரட்டி விட்டார்கள்.பிறகு கவுண்டர்,”இருங்கடா..ஊருல இருந்து ஆளைக்கூட்டிக்கிட்டு வரேன்”னு கோபமாக கிளம்பிட்டார்.ஓடைவழியாக ஓட்டஓட்டமாய் வரும் கவுண்டரைப்பார்த்து வடக்குத்தெரு நாடார்கள், ”என்னாப்பா..இம்புட்டு வேகமா கோவமா வர்ற”என்று கேட்கவும்,அவர் சம்பவத்தை விளக்கியதுதான் தாமதம், வடக்குத்தெருவில் இருந்து ஒருபெரும்படையே கிளம்பிவிட்டது.”எவண்டா எங்கஊரு மாட்டை அடிக்கிறவன்”னு கூவிக்கிட்டே..
                                                        அப்புடி கோபமாக கிளம்பிய ஆட்களெல்லாம் போனவேகத்துக்கு,புழுதி பறக்குது.இதெல்லாம் நடக்கும்வரைக்கும் அந்த சிறுகன்னுக்குட்டியை நீந்தவைத்து கிறங்கடித்து விட்டார்கள்.அதைப்பார்த்த உடனே கோம்பைக்காரர்களுக்கு கோபம் தாங்கமுடியவில்லை.மிகுந்த கோபத்துடன் அவர்கள் போட்ட அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கியது..அப்படிஒரு அடியை அவர்கள் வாழ்நாளில் வாங்கியிருக்க மாட்டார்கள்.ஒரு சிறுகன்றுக்குட்டி என்றும்பாராமல் வதம்செய்தால் யாருக்குத்தான் கோபம்வராது?அப்புறம் பெரியசண்டையும் நடந்தது.மாட்டையும் புடிச்சுட்டு வந்துட்டாரு கவுண்டரு.
 மாட்டைப்புடிச்சுட்டு வந்தவர் நேராக நாடாக்கமாரு திருக்கண்ல வந்து மாட்டைக்கட்டிப் போட்டுவிட்டார்.”என்னாப்பா இது” என்று எல்லாரும் கேட்டபோது, ”இந்த கன்னுக்குட்டியை மீட்டு வந்தது நீங்கதானே..நீங்களே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்”என்று சொல்லிவிட்டு ,அவர்பாட்டுக்கு போய்விட்டார்.அப்பொழுதுதான்” நான் வளர்க்கிறேன்”என்று முன்வந்தவர் அய்யாச்சாமி நாடார். எல்லாரும் சரியென்று ஒத்துக்கொண்டார்கள்.அவரும் மாடு வளர்ப்பில் சளைத்தவர் அல்ல. வெள்ளைகாளையை வீம்பாக,வீரமாக வளர்த்தார்.கோம்பைக்கு மேற்கே ஆலமரங்கள் நிறைந்திருக்கும் மணல்காடான கட்டையாலா,நாலாலா அப்புறம் சந்தையாலா காட்டுக்குத்தான் காளைக்கு குத்துப்பழக்குவதற்கு கூட்டிக்கிட்டு போவார். மணலில் நடந்தால்தான் காலுக்கு தெம்பு.அப்புறம் ஆலமரத்தில் வாழைமரத்தைக் கட்டிவத்து குத்துப்பழக்குவார்.வாழைமரம் தான் கொம்புக்கு இதமாக இருக்குமாம்.இப்படி ஒவ்வொருநாளும் வெள்ளைகாளையை பார்த்து பார்த்து பக்குவமாக வளர்த்தார் அய்யாச்சாமி நாடார்.


                              கோம்பையில் ஜல்லிக்கட்டு என்றால் மணியார்மார்சாவடியில் துவங்கி,தேரடிவரைக்கும் காளைகள் ஓடும். அந்தவருட பொங்கலுக்கு  கோம்பைவெள்ளை, வாடிவாசலில் இருந்து கிளம்பிய உடனேயே பத்துப்பேரின் ரத்தத்தை பார்த்துவிட்டது.அதோடு அடங்காமல் திருக்கண்ணில்  கட்டிவைத்திருந்த கரும்புக்கட்டை குத்தி எறிந்து,பிறகு காளியம்மன் கோயில் வாசலில் நிறுத்தி வைத்திருந்த கண்திருஷ்டி பொம்மையை நார்நாராக்கி, யாருக்கும் அடங்காமல் தானாகவே வீடுவந்து சேர்ந்தது.உள்ளூர்காரர்கள் உள்ளூர்மாட்டை பிடிக்கக்கூடாது என்ற சம்பிரதாயம் இருந்தாலும், அன்றைக்கு உள்ளூர்காரர்களாலேயே கோம்பைவெள்ளையை நெருங்க முடியவில்லை.அந்த ஜல்லிக்கட்டில் கோம்பைவெள்ளைக்கு ஏறின மவுசு,அதன்பிறகு குறையவே இல்லை.ஒருமுறை உசிலம்பட்டி ஜல்லிக்கட்டுக்கு கால்நடையாகவே கோம்பைவெள்ளையை கூட்டிக்கொண்டு போனார்கள்.அந்த ஜல்லிக்கட்டில்  நடந்த சம்பவங்களை இப்போது நினைத்தாலும் குலைநடுங்கிவிடும். கன்றுக்குட்டியில் இருந்து பார்த்ததினால் அதன் வளர்ச்சி நமக்கு தெரியவில்லை.மற்ற மாடுபிடிக்காரர்கள் சொன்னபிறகுதான், அதன் திமிரே கோம்பைக்காரர்களுக்கு தெரியவந்தது. கோம்பைவெள்ளையை பிடிக்கும் திட்டத்தோடு பலஊர்க்காரர்களும் ஒரு கோப்பாகத்தான் வந்திருந்தார்கள்.வாடிவாசலில் இருந்து செருக்கடித்துக்கொண்டே கண்ணை உருட்டி பார்த்தது.ஒரே தவ்வு தவ்வி ஓடாமல், அப்பிடியே திரும்பி நின்றுவிட்டது.ஓடும் என்று எதிர்பார்த்து பின்னாடியே போன மாடுபிடிக்காரர்கள் திகைக்கக்கூட நேரமில்லாமல் குத்துப்பட்டு மண்ணில் சாய்ந்தார்கள்.அப்படியே திரும்பி எதிரே நிற்பவர்களை பார்த்தது.அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே கொம்பால் சுண்டிவிட்டது. அன்றைக்கு என்ன ஆனதோதெரியவில்லை வாடிவாசலுக்கு முன்னாலேயே நின்றுகொண்டு,வேறு மாடுகளுக்கும் வழிவிடாமல் மறியல் பண்ண ஆரம்பித்தது.”மாட்டுக்காரன் மாட்டை புடிக்கிறியா இல்லை சுட்டு பிடிக்கவா” என்று ஜில்லா கலெக்டர் சொன்னபிறகுதான், அய்யாச்சாமி நாடார் அசால்டாக போய் கோம்பைவெள்ளையை பிடித்துக்கொண்டு வந்தார்.அப்பொழுதும்கூட, அது அரைக்கோபத்தோடுதான் அவர் பின்னாலேயே போனது.அன்றைக்கு கோம்பைவெள்ளை குத்திய ஆட்களை எல்லாம்,ஒரு லாரியில் ஏற்றித்தான், மதுரை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.
                        இப்படி ஏரியா முழுக்கவும்,பெயர்வாங்கிய கோம்பைவெள்ளையை  விலைக்கு வாங்க பல ஜமீந்தார்களும் போட்டி போட்டார்கள்.வயல் தருகிறேன், ஏலமலை தருகிறேன் என்று  அவரவர்கள் ஒருவிலை சொன்னார்கள்.எல்லாவற்றுக்கும் அய்யாச்சாமி நாடார் முடியாது என்று  மறுத்து சொல்லிவிட்டார்.அந்தநேரத்தில் கோம்பைவெள்ளைக்கு சமானமா பெயர்வாங்கியது, நடுத்தெரு மண்ணடிசாமி கவுண்டருடைய கொராலு. பிற்பாடு கோம்பையில் நடந்த ஒரு ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சாதிச்சண்டை பெரிய கலவரமாகி,பலபேர் செத்துப்போனார்கள்.அதில் இருந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று ஆர்டர் போட்டதினால்,பதினைந்து வருடமாக ஜில்லாவிலேயே ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.அப்புறம் என்ன கோம்பை வெள்ளையாவது,கொராலாவது,எல்லாவற்றையும் ஏரில் பூட்டி உழவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.எத்தனையோ பேர் வீட்டில் இழவு விழச்செய்த கோம்பை வெள்ளை அன்றையில் இருந்து உழவு செய்ய ஆரம்பித்துவிட்டது.                    

Thursday 26 January 2012

துத்தித்தி கிழவி

            என்னுடைய சிறுபிராயத்தில்(இப்போதும்கூட நான் என்னை அப்படியே எண்ணிக்கொள்வது ஒருபுறம்)காலையில் என்னை திடுக்கிடச்செய்து தூக்கத்திலிருந்து எழுப்பும் குரலுக்கு சொந்தக்காரிதான் துத்தித்தி கிழவி. மேற்கே அரண்மனைத்தெருவில் இருந்து கிழக்கே காளியம்மன் கோயில் வழியாக தேரடி வரையில் காலைவேளையில் மிரட்டும் குரலோடு அயராது தினமும் செல்பவள் அவள்.அந்த நேரங்களில் எங்கள் வீடு தெருவோரம் இருந்ததை எண்ணி வருந்தியதற்குக் காரணம் அந்த துத்தித்தி கிழவிதான். ஏனெனில் சந்திற்குள் வசிக்கும் நண்பர்களுக்கு அவளது குரலின் வீரியமும், அச்சுறுத்தலும் தெரியாது.ஆனால் எனது தூக்கத்தைக் கலைப்பது அவளது குரல் தான்.நான்கு வீடு தள்ளி அவளது குரல் கேட்கும்போதே குலைநடுங்கிவிடும். அப்படியே எழுந்து கதவு இடுக்கு வழியாக அவள் எங்கள் வீட்டைக் கடக்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.சிலநேரங்களில் அவள் எங்கள் வீட்டின்முன் நின்று,அவளைச் சுற்றிவளைக்கும் நாய்களை வெறியோடு துரத்துவதும் உண்டு.அதுமாதிரியான சமயங்களில் அவள் காட்டும் வேகம் எனது பயத்தை மிகுதிப்படுத்திவிடும்.
                                     பல நாட்கள் என்னைவிட வயதில் மூத்த பெரிய பையன்கள் கற்களை எடுத்து அவள் மீது எறிவார்கள்.அவள் வலி தாங்கமுடியாமல்,மேலும் கொடூரமான குரலில் கத்தி,அனைவரையும் பார்த்து யாருக்குமே புரியாத மொழியில் ஓலமிடுவாள்.பலரும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிப்பார்கள். அப்போதெல்லாம் அந்த கல்லெறி வீரர்களை பயமில்லாதவர்கள் என எண்ணி பொறாமைப்படுவதுண்டு.நாய்கள் துரத்தும் போதும்,மனிதர்கள் கல்லால் அடிக்கும்போதும் மட்டுமல்லாமல்,அவள் எப்போதும் கூறும் ஒரேவார்த்தை, ”துத்தித்தி...துத்தித்தி” என்பதுதான்.அதனால்தான் அவளுக்கு துத்தித்தி கிழவி என்று பெயர் வந்ததுபோல.தெருவில் இருக்கும் சிறுவர்களை,பெரியவர்கள் மிரட்டுவதாக இருந்தால்கூட துத்தித்திகிழவியிடம் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்று கூறித்தான் பயமுறுத்துவார்கள். இவ்வாறு ஏன் பயப்படுகிறேன்  என்றே தெரியாமல்,என்னை அச்சமுற வைத்த துத்தித்திகிழவி சில நாட்களாக வராமல் போனாள்.அவள் வராத நாட்களில் கதவிடுக்கு வழியே அவள் வருகிறாளா என்று,பள்ளிக்குச் செல்லும்வரை காத்திருந்து பார்ப்பதுண்டு.அந்த நேரத்தில்தான் எனது பயத்தைப்போக்கி, மகிழ்ச்சியுறச்செய்த செய்தி எனது சித்தப்பாவின் வாயிலாக வந்தது.அது துத்தித்தி கிழவி இறந்துவிட்டாள் என்பதுதான்.
                                             அந்த நேரத்தில் என்னை மகிழ்வுறச் செய்த முதல் சாவு அவளின் சாவுதான்.சிலவருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது,அவள் மனநிலை சரியில்லாதவள் என்பதும்,அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்பதும். மனநிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை கல்லால் அடித்ததையும்,அதனை ரசித்தவர்களையும் காணும்போது,அவர்கள் மனிதமனம் படைத்தவர்களா என்றே எண்ணுகிறது மனம்.மனநிலை பிறழ்ந்த ஒருத்தியின் வலியை, வேதனையை கொண்டாடிய சமூகத்தின் வன்முறை என்னையும் பாதிக்கும் என்பதை,வன்முறைமிக்க சமூகத்தால் எப்படி உணரமுடியும். இப்போதும் தெருவில் யாராவது ஒரு கிழவி கையில் பிரம்போடு புலம்பிக்கொண்டு சென்றால்,துத்தித்தி கிழவியே என்னை ஆக்கிரமித்து கண்களில் சிலதுளி விழச்செய்கிறாள். எனது பாட்டி வயதொத்த அந்த மூதாட்டியை அவள் என்று விளிப்பதும்கூட,அவளுடன் தொலைத்துவிட்ட உறவை, நெருக்கமாக்கிக்கொள்ளும் சிறுவழிதான்..