என்னுடைய சிறுபிராயத்தில்(இப்போதும்கூட நான் என்னை அப்படியே எண்ணிக்கொள்வது ஒருபுறம்)காலையில் என்னை திடுக்கிடச்செய்து தூக்கத்திலிருந்து எழுப்பும் குரலுக்கு சொந்தக்காரிதான் துத்தித்தி கிழவி. மேற்கே அரண்மனைத்தெருவில் இருந்து கிழக்கே காளியம்மன் கோயில் வழியாக தேரடி வரையில் காலைவேளையில் மிரட்டும் குரலோடு அயராது தினமும் செல்பவள் அவள்.அந்த நேரங்களில் எங்கள் வீடு தெருவோரம் இருந்ததை எண்ணி வருந்தியதற்குக் காரணம் அந்த துத்தித்தி கிழவிதான். ஏனெனில் சந்திற்குள் வசிக்கும் நண்பர்களுக்கு அவளது குரலின் வீரியமும், அச்சுறுத்தலும் தெரியாது.ஆனால் எனது தூக்கத்தைக் கலைப்பது அவளது குரல் தான்.நான்கு வீடு தள்ளி அவளது குரல் கேட்கும்போதே குலைநடுங்கிவிடும். அப்படியே எழுந்து கதவு இடுக்கு வழியாக அவள் எங்கள் வீட்டைக் கடக்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.சிலநேரங்களில் அவள் எங்கள் வீட்டின்முன் நின்று,அவளைச் சுற்றிவளைக்கும் நாய்களை வெறியோடு துரத்துவதும் உண்டு.அதுமாதிரியான சமயங்களில் அவள் காட்டும் வேகம் எனது பயத்தை மிகுதிப்படுத்திவிடும்.
பல நாட்கள் என்னைவிட வயதில் மூத்த பெரிய பையன்கள் கற்களை எடுத்து அவள் மீது எறிவார்கள்.அவள் வலி தாங்கமுடியாமல்,மேலும் கொடூரமான குரலில் கத்தி,அனைவரையும் பார்த்து யாருக்குமே புரியாத மொழியில் ஓலமிடுவாள்.பலரும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிப்பார்கள். அப்போதெல்லாம் அந்த கல்லெறி வீரர்களை பயமில்லாதவர்கள் என எண்ணி பொறாமைப்படுவதுண்டு.நாய்கள் துரத்தும் போதும்,மனிதர்கள் கல்லால் அடிக்கும்போதும் மட்டுமல்லாமல்,அவள் எப்போதும் கூறும் ஒரேவார்த்தை, ”துத்தித்தி...துத்தித்தி” என்பதுதான்.அதனால்தான் அவளுக்கு துத்தித்தி கிழவி என்று பெயர் வந்ததுபோல.தெருவில் இருக்கும் சிறுவர்களை,பெரியவர்கள் மிரட்டுவதாக இருந்தால்கூட துத்தித்திகிழவியிடம் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்று கூறித்தான் பயமுறுத்துவார்கள். இவ்வாறு ஏன் பயப்படுகிறேன் என்றே தெரியாமல்,என்னை அச்சமுற வைத்த துத்தித்திகிழவி சில நாட்களாக வராமல் போனாள்.அவள் வராத நாட்களில் கதவிடுக்கு வழியே அவள் வருகிறாளா என்று,பள்ளிக்குச் செல்லும்வரை காத்திருந்து பார்ப்பதுண்டு.அந்த நேரத்தில்தான் எனது பயத்தைப்போக்கி, மகிழ்ச்சியுறச்செய்த செய்தி எனது சித்தப்பாவின் வாயிலாக வந்தது.அது துத்தித்தி கிழவி இறந்துவிட்டாள் என்பதுதான்.
அந்த நேரத்தில் என்னை மகிழ்வுறச் செய்த முதல் சாவு அவளின் சாவுதான்.சிலவருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது,அவள் மனநிலை சரியில்லாதவள் என்பதும்,அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்பதும். மனநிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை கல்லால் அடித்ததையும்,அதனை ரசித்தவர்களையும் காணும்போது,அவர்கள் மனிதமனம் படைத்தவர்களா என்றே எண்ணுகிறது மனம்.மனநிலை பிறழ்ந்த ஒருத்தியின் வலியை, வேதனையை கொண்டாடிய சமூகத்தின் வன்முறை என்னையும் பாதிக்கும் என்பதை,வன்முறைமிக்க சமூகத்தால் எப்படி உணரமுடியும். இப்போதும் தெருவில் யாராவது ஒரு கிழவி கையில் பிரம்போடு புலம்பிக்கொண்டு சென்றால்,துத்தித்தி கிழவியே என்னை ஆக்கிரமித்து கண்களில் சிலதுளி விழச்செய்கிறாள். எனது பாட்டி வயதொத்த அந்த மூதாட்டியை அவள் என்று விளிப்பதும்கூட,அவளுடன் தொலைத்துவிட்ட உறவை, நெருக்கமாக்கிக்கொள்ளும் சிறுவழிதான்..
Dear Shanmugam,
ReplyDeleteNice post. I am originally from Pannaipuram, but lived in Kombai for about 8 year. I still remember thuthu kilavi. She was a terror to kids those days...one more terror is Dhanuskodi....Hope you know him.
This post made me going 18 years back. :-)
-Mugunth.
நன்றி... தனுஷ்கோடியை அறியாதார் கோம்பையில் உண்டா..?
Delete