Thursday, 26 January 2012

துத்தித்தி கிழவி

            என்னுடைய சிறுபிராயத்தில்(இப்போதும்கூட நான் என்னை அப்படியே எண்ணிக்கொள்வது ஒருபுறம்)காலையில் என்னை திடுக்கிடச்செய்து தூக்கத்திலிருந்து எழுப்பும் குரலுக்கு சொந்தக்காரிதான் துத்தித்தி கிழவி. மேற்கே அரண்மனைத்தெருவில் இருந்து கிழக்கே காளியம்மன் கோயில் வழியாக தேரடி வரையில் காலைவேளையில் மிரட்டும் குரலோடு அயராது தினமும் செல்பவள் அவள்.அந்த நேரங்களில் எங்கள் வீடு தெருவோரம் இருந்ததை எண்ணி வருந்தியதற்குக் காரணம் அந்த துத்தித்தி கிழவிதான். ஏனெனில் சந்திற்குள் வசிக்கும் நண்பர்களுக்கு அவளது குரலின் வீரியமும், அச்சுறுத்தலும் தெரியாது.ஆனால் எனது தூக்கத்தைக் கலைப்பது அவளது குரல் தான்.நான்கு வீடு தள்ளி அவளது குரல் கேட்கும்போதே குலைநடுங்கிவிடும். அப்படியே எழுந்து கதவு இடுக்கு வழியாக அவள் எங்கள் வீட்டைக் கடக்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.சிலநேரங்களில் அவள் எங்கள் வீட்டின்முன் நின்று,அவளைச் சுற்றிவளைக்கும் நாய்களை வெறியோடு துரத்துவதும் உண்டு.அதுமாதிரியான சமயங்களில் அவள் காட்டும் வேகம் எனது பயத்தை மிகுதிப்படுத்திவிடும்.
                                     பல நாட்கள் என்னைவிட வயதில் மூத்த பெரிய பையன்கள் கற்களை எடுத்து அவள் மீது எறிவார்கள்.அவள் வலி தாங்கமுடியாமல்,மேலும் கொடூரமான குரலில் கத்தி,அனைவரையும் பார்த்து யாருக்குமே புரியாத மொழியில் ஓலமிடுவாள்.பலரும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிப்பார்கள். அப்போதெல்லாம் அந்த கல்லெறி வீரர்களை பயமில்லாதவர்கள் என எண்ணி பொறாமைப்படுவதுண்டு.நாய்கள் துரத்தும் போதும்,மனிதர்கள் கல்லால் அடிக்கும்போதும் மட்டுமல்லாமல்,அவள் எப்போதும் கூறும் ஒரேவார்த்தை, ”துத்தித்தி...துத்தித்தி” என்பதுதான்.அதனால்தான் அவளுக்கு துத்தித்தி கிழவி என்று பெயர் வந்ததுபோல.தெருவில் இருக்கும் சிறுவர்களை,பெரியவர்கள் மிரட்டுவதாக இருந்தால்கூட துத்தித்திகிழவியிடம் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்று கூறித்தான் பயமுறுத்துவார்கள். இவ்வாறு ஏன் பயப்படுகிறேன்  என்றே தெரியாமல்,என்னை அச்சமுற வைத்த துத்தித்திகிழவி சில நாட்களாக வராமல் போனாள்.அவள் வராத நாட்களில் கதவிடுக்கு வழியே அவள் வருகிறாளா என்று,பள்ளிக்குச் செல்லும்வரை காத்திருந்து பார்ப்பதுண்டு.அந்த நேரத்தில்தான் எனது பயத்தைப்போக்கி, மகிழ்ச்சியுறச்செய்த செய்தி எனது சித்தப்பாவின் வாயிலாக வந்தது.அது துத்தித்தி கிழவி இறந்துவிட்டாள் என்பதுதான்.
                                             அந்த நேரத்தில் என்னை மகிழ்வுறச் செய்த முதல் சாவு அவளின் சாவுதான்.சிலவருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது,அவள் மனநிலை சரியில்லாதவள் என்பதும்,அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்பதும். மனநிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை கல்லால் அடித்ததையும்,அதனை ரசித்தவர்களையும் காணும்போது,அவர்கள் மனிதமனம் படைத்தவர்களா என்றே எண்ணுகிறது மனம்.மனநிலை பிறழ்ந்த ஒருத்தியின் வலியை, வேதனையை கொண்டாடிய சமூகத்தின் வன்முறை என்னையும் பாதிக்கும் என்பதை,வன்முறைமிக்க சமூகத்தால் எப்படி உணரமுடியும். இப்போதும் தெருவில் யாராவது ஒரு கிழவி கையில் பிரம்போடு புலம்பிக்கொண்டு சென்றால்,துத்தித்தி கிழவியே என்னை ஆக்கிரமித்து கண்களில் சிலதுளி விழச்செய்கிறாள். எனது பாட்டி வயதொத்த அந்த மூதாட்டியை அவள் என்று விளிப்பதும்கூட,அவளுடன் தொலைத்துவிட்ட உறவை, நெருக்கமாக்கிக்கொள்ளும் சிறுவழிதான்..

Friday, 12 August 2011

வேட்டை



 மனுசனுக்கு ரொம்ப பிடிச்ச விசயங்கள்ல ஒண்ணு வேட்டை. ஆரம்பத்தில உணவுக்காக கைல கெடச்ச கல்லு,கட்டைய வச்சு மிருகங்கள கொன்னு,அதச் சுட்டுத்தின்னு உயிர்வாழ்ந்தான்.பிற்பாடு வில்லு,அம்புன்னு கொஞ்சம் தூரமா தள்ளி நின்னு வேட்டையாடினான்.அப்புறம் ராஜா காலத்துல வீரம்னு சொல்லி படை,பரிவாரங்களோட யானை மேலேயோ இல்லாட்டி குதிரை மேலேயோ போயி பாதுகாப்பா வேட்டையாடினான்.அதுக்கப்புறம் பொழுதுபோக்குக்காக ஜீப்புல போயி துப்பாக்கிகளோட வேட்டைக்குப் போனான்.இப்படி பல பரிமாணங்களில் இருந்தாலும் வேட்டை மட்டும் தொடர்ந்து நடந்துக்கிட்டேதான் இருக்கு.அப்படி ஒரு வேட்டைதான் இது.                                                                                                                  கோம்பையிலயே கருப்பணன மாதிரி ஆள பாக்கணும்னா அவரு முன்னால இருக்குற கண்ணாடிய பாத்தாத்தேன். அவ்வளவு ஒசரமும்,அகலமும் அளவெடுத்து செஞ்சாப்பில அப்பிடி இருப்பாரு. பெரிய தாட்டியமானவருங்கூட.ஊர் நாயம் ஒலக நாயம் பேசுவாரு.விவசாயத்துல வெத்து ஆளுதான்.ஆனா வேட்டையில சூரப்புலி. அவரு காட்டுக்குள்ள வேட்டைக்கு வரும் வாசனை தெரிஞ்சாலே மிருகங்களெல்லாம் சொர்ரு சொர்ருனு மோண்டுக்கிட்டே ஓடும்.அப்படிப்பட்ட ஆளுக்கு தொணையா இருந்து வந்தது மணிங்கிற நாய்தான்..காட்டு நாய்க்கும், நாட்டு நாய்க்கும் பெறந்த வித்து அது. காட்டு நாயின் ஆக்ரோசமும், வேகமும் நாட்டு நாயின் நன்றியும் அன்பும் சேர்ந்த கலவை அது. மணிக்கு நல்லா ஒல்லியான காலு மானுக்கு இருக்கிற மாதிரி,எந்நேரமும் வெடச்ச காதுகள் கொம்பு மாதிரியே.கூர்மையான மூக்கு மூலமா முந்தாநாள் முருங்கக்காய் தின்னவன மக்காநாள் புடிச்சுப்புடும்.அதோட நீளம் ஆறடி இருக்கும் வாலைச்சேர்த்து.காலு ரெண்டையும் தூக்கி நின்னா கருப்பணன் தோளில் தூக்கிப்போடும்.கருப்பணன் வண்டிமாட்டைப் பூட்டிக்கிட்டு வெள்ளாமக் காட்டுக்கு கிளம்பினா வண்டியில் ஏறி ஜம்முனு ஆளுமாதிரியே உக்காந்திருக்கும்.கருப்பணனோட வெள்ளாமக் காட்டுக்கு மணி ஒண்ணுதான் காவல்.கருப்பணன்  இல்லாம அவரு பொண்டாட்டியே காட்டுக்குள்ள நொழையமுடியாதுன்னா பாத்துக்கங்களேன்.மணிகிட்ட அதப்புடின்னு மெதுவாச் சொன்னா புடிக்கும்,சத்தமாச் சொன்ன கடிக்கும்.அது பேருக்குத்தான் நாய் மத்தபடி அது ஒரு வேங்கை மாதிரி....
                                                                                                                                                                                                             அப்படித்தான் கருப்பணன் ஒரு நாள் மணியக் கூட்டிக்கிட்டு வேட்டைக்குப் போலாமுன்னு கையில ஒரு வெட்டருவாள எடுத்துக்கிட்டு வாழக்கோம்பக் காட்டுக்கு போனாரு. வாழக்கோம்பக் காட்டுக்குள்ள நொழஞ்சிட்டா வானத்தையே பாக்க முடியாது. சூரிய வெளிச்சமே தயங்கி தயங்கித் தான் காட்டுக்குள்ளயே விழும்.மரங்களுக்கு இடையில நடக்குறதே சர்க்கஸ் வேலை பாக்குற மாதிரிதான். அந்தக்காட்டுக்குள்ள இல்லாத சீவசந்துக்களே இல்லைனுசொல்லலாம்.  அவ்வளவு பயங்கரமான காடு அது.காட்டுக்குள்ள ரெண்டுபேரும்  நொழஞ்ச உடனேயே பறவைகளெல்லாம் வந்தவுகள வஞ்சுக்கிட்டே ஓடிப்போயிருச்சுக.கருப்பணன் நமக்குத்தேவை பறக்குறது இல்ல இருக்குறது தான்னு சொல்லிக்கிட்டு காட்டுக்குள்ளாற போனாரு. அவருக்கு முன்னால மணி ஒவ்வொரு பக்கமா மோப்பம் புடிச்சுக்கிட்டே போய்க்கிட்டிருந்தான்.முன்னாடி போனவன் திடீர்னு குரைக்க ஆரம்பிச்சான்.என்னடா நம்ம மணி சத்தம் கேக்குதேன்னு கருப்பணன் ஓட்ட ஓட்டமா ஓடிப்போயி பாத்தாரு.அங்க பார்த்தா ஒரு முழுப்புலி அசையாம படுத்துக் கெடக்கு.கருப்பணன் வந்த உடனே மணிக்கு கோவம் வந்துருச்சு.என் எஜமான் வந்துருக்காரு எந்திரிக்காம படுத்துக் கெடக்குற்யா புலியேன்னு கோவம் வந்துருச்சு அந்த விசுவாசமான வேலைக்காரனுக்கு.அப்படியே குரைச்சுக்கிட்டே புலி பக்கத்துல போறான்.டேய் போகாதடான்னு கருப்பணன் கத்தினாலும் கேக்க மட்டேங்குறான்.கோவம் வந்தாத்தான் மனுசப்பயலே மன நிலை தடுமாறுரான் அது எம்மாத்திரம்.மணி புலி பக்கத்துல போய் அத கடிக்கப்போறான்.அப்பத்தான் அந்தப்புலி எந்திருச்சு நின்னு உருமுச்சு.யப்பா எவ்வளவு பெருசு.காண்டாமிருகத்தோட கடசித்தம்பி மதிரி உடம்பில ஒரு திமிரு. நம்ம மணி என்ன லேசுப்பட்டவனா ரொம்ப மொனையானவன் ஆச்சே. புலிகூட சண்டைக்கு ரெடி ஆயிட்டான்.ரெண்டும் நிக்கிறதப் பாக்குறப்போ புலிக்கு புலி பொருதுறது மாதிரி இருக்கு.கருப்பணனுக்கு புரிஞ்சு போச்சு. ரெண்டும் சண்டைபோட தயாராயிருச்சு நாம சும்மா விடக்கூடாதுன்னு.ரெண்டுபேரும் தனித்தனியா நின்னாத்தான் சமாளிக்க முடியும்னு புலியோட பின்பக்கத்த்ல நின்னுக்கிட்டார் கருப்பணன். மனுசனால நமக்கு ஆபத்து இல்ல இந்த நாயிதான் நமக்கு இம்சைன்னு புலி நெனச்சுருச்சு போல மணி மேல திடீர்னு பாய ஆரம்பிச்சுருச்சு.உடனெ கருப்பணன் என் மணிமேலயா பாயுறன்னு கைல வச்சிருந்த வெட்டருவாளால் புலியோட பின்னத்தான் காலுல ஒரு வெட்டு வெட்டுனாரு.ரத்தம் சீத்துன்னு பீச்சி அடிச்சது. புலிக்கு கண்னுமண்ணு தெரியாத கோவமாயிருச்சு.அப்படியே கருப்பணன் மேலெ பாய ஆரம்பிச்சுருச்சு.உடனே மணி புலியோட கால்களுக்கு இடையில கூடி அதோட உயித்தளத்த கொட்டையோட சேர்த்து கவ்வி இழுக்க ஆரம்பிச்சுட்டான். அவ்வளவுதான் புலியால ஒண்ணுமே செய்ய முடியல.அப்படியே கரகரன்னு தட்டாமாலை சுத்துது. மணியும் புலியோட சேர்ந்து கரகரன்னு சுத்துறான்.செத்த நேரத்துல புலி செத்துப் போயிருச்சு. ஆனாலும் கடைசிவரைக்கும் மணி தன்னோட பிடிய விடலை.விட்டாக் கடிச்சிருமோன்னு நெனச்சிருச்சு போல. அப்புறம் கருப்பணன் தான் மணிகிட்ட போயி கழுத்த தடவிக் குடுத்து பிடிய விட வச்சாரு.மணிய புலிக்கு காவல் வச்சிட்டு ஊருக்குள்ள போயி வண்டி மாட்டக்கட்டிக்கிட்டு மூனுபேரோட வந்தாரு. வந்தவுக புலியப் பார்த்து வாயடச்சு போய்ட்டாக. நாலுகாலையும் கூட்டாக்கட்டி  ஒருமரக்கிளைய உடைச்சு நாலுபேரும் முக்கித்தக்கி தூக்கி வண்டியில போட்டாங்க. வண்டி வாழக்கோம்ப காட்டவிட்டு கெளம்பிருச்சு. மணி மட்டும் வண்டியில ஏறாம சுத்தி முத்தி பாத்துக்கிட்டே வண்டிக்கு முன்னால போய்க்கிட்டிருந்தான்.அப்புறம் பாதைக்கு வந்தவுடன் வண்டியில ஏறி கருப்பணன் பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டான் மணி.கருப்பணனுக்கு பெருமை பிடிபடல.முகம் முழுக்க ரத்தத்தோட மணியையும் புலியையும் வச்சு கோம்பையவே ஒரு ரவுண்டு வந்தாரு கருப்பணன்.ஊரே வந்து வாயப் பொழந்து வேடிக்கை பாத்தாங்க.கருப்பணன் விளம்பரம் மாதிரி பல்லை காட்டிக்கிட்டே இருந்தாரு.அப்புறம அந்த புலிய பாடம் பண்ணி வீட்டுல வச்சு அழகு பாத்தாரு.இப்படி மனுசனுக்கு மனுசனாகவும்,மிருகத்திற்கு மிருகமாகவும் இருந்த மணி ஒரு நாள் காட்டுக்குப் போறப்ப முள்ளம் பன்னிய புடிக்கிறேன்னு தொண்டைக்குழியில முள்ளுத்தச்சு செத்துப் போயிட்டான்...

Wednesday, 6 July 2011

கோம்பை

கோம்பை என்றால் முடக்கு என்பது பொருள்.மலைகளுக்கு இடையேயான முடக்கில் அமைந்திருக்கும் ஊர்கள் கோம்பை என்று அழைக்கப்படுகின்றன.அப்படிப்பட்ட ஓர் இடத்தின் சுவாரஸ்யமான பதிவுகளே இனி வருபவை.. கோம்பை என்ற பெயரைக் கேட்டவுடன் நாய்கள் தான் நினைவிற்கு வரும்.ஏனெனில் வேட்டையில் மிகுந்த அனுபவமிக்கவை. அவ்வாறான ஒரு வேட்டை நாயைப் பற்றிய பதிவுகளே அடுத்த ப்ளாக்கில்....