Wednesday, 4 April 2012

நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்

                                     நான் காற்றிலே மிதப்பது போன்ற உணர்வு என்னை பரவசமடையச்செய்து கொண்டிருந்தது.எப்போதிருந்து அந்த உணர்வு எனக்கு வந்தது என்று சரியாக சொல்லமுடியவில்லை.சில நாட்களாக வலியுடன் போராடிக்கொண்டிருந்த நான்,நேற்றிரவு வழக்கம்போல் தான் வலியுடன் தூங்கினேன்.மறுநாள் காலை பரவசநிலையுடன் பார்த்தால்,எனது உடலைச்சுற்றி அம்மா,அக்கா,அண்ணன் எல்லாம் அழுதுகொண்டிருந்தனர். அப்போதுதான் நான் இறந்து விட்டிருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். அடடா!என்ன ஆனந்தநிலை!பறப்பது போன்றே இருந்தது.இவ்வளவு நாளும் சுமந்து வந்த உடலை,பாரத்தை இறக்கி வைத்துவிட்டதால்,மிகவும் லேசாக இருப்பதாக உணர்ந்தேன்.ஒருவேளை நான் உயிரோடு இருந்ததே இப்படி ஒரு பரவசநிலையை அடையத்தானோ?என நினைத்தேன்.
                                    வீட்டிற்குள் ஆட்கள் நிறைந்து இருந்தனர்.அம்மா இடைவெளியின்றி அழுது கொண்டிருந்தாள்.நான் மிகுந்த சங்கடத்துடன் மற்றவர்களையும் பார்த்தேன்.அக்காவும்,அண்ணனும் மிகவும் வருந்தித்தான் போனார்கள்.தன்னில்பாதியை இழந்ததால் வந்த வருத்தம்தான்.தந்தையை தேடிப்பார்த்தால்,தூணில் சாய்ந்து உட்கார்ந்து வெறுமையை  நோக்கிக் கொண்டிருந்தார்.எல்லாமே வெறுமை என்பதை இழப்பு வரும்போதுதான் உணர்ந்துகொள்ள முடியும்போல.அய்யோ!எவ்வளவு சிரமத்தினை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன்.ஒரு காலகட்டத்தில்,அப்போது இருக்கும் மனநிலையில் நாம் சரி என்று செய்த தவறான செயல்கள்,பின்னாளில் நமது மனம் பக்குவப்படும்போது,அந்த செயலை எண்ணி சொல்லமுடியாத அளவிற்கு வேதனையைத் தருகிறது. அழுதேன்.இறந்த என் உடலைப்பார்த்து அவர்கள் அழுகிறார்கள்.அதனால் பாதிப்படைந்து இருக்கிற அவர்களின் மனதைப்பார்த்து  நான் துக்கப்படுகிறேன். என் உடலைப்பார்க்க உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.பார்க்க வந்தவர்கள் பார்க்காமலேயே வெளியில் உட்கார்ந்திருந்தனர். இதுவரை நான் நல்லவர்,கெட்டவர் என்று வரையறுத்து வைத்திருந்தவர்களின் உண்மைநிலையைக் காணக்கூடிய வாய்ப்பு, அந்தநிலையில் எனக்குக் கிடைத்திருந்தது.
                                              என் உடலைப்பார்க்க வந்திருந்த பலரும் என்னைப்பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒருசிலர் இவன் நல்லவன் என்றுகூறி,நான் எனக்குத்தெரியாமலேயே செய்த சில விஷயங்களைக் கூறினர்.சிலர் நான் நல்லவை என்று நினைத்து செய்ததைக்கூறி,இவன் சரியானஆள் இல்லை என்றும் கூறிக்கொண்டு இருந்தனர்.இப்படியெல்லாம் ஆளாளுக்கு பேசிக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மௌனமாகவே உட்கார்ந்திருந்தனர்.அவர்கள் மனமோ வேறுஒரு பாதைக்கு போய்க்கொண்டிருந்தது.வந்திருந்தவர்களில் சிலர் வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் ஏதோ கோபத்துடன் வந்திருந்தனர்.அவர்களின் மனமோ மௌனமாக இருக்கும்போது,கோபத்தை ஒளித்துவைத்து பழிவாங்குதலைப்பற்றியே  சிந்தித்துக் கொண்டிருந்தது.கோபத்தைக் கொல்லும் மனிதன் குரோதத்தை வளர்த்துக்கொள்வது எனக்கு அப்போதுதான் புரிந்தது.ஒரு ஓரமாக என் அக்காமகள் பூனையிடம் என் உடலைக்காட்டி, நான் இறந்து விட்டதாகக்கூறி அழுத முகத்துடன் இருந்தாள்.நான் செய்த செயல்களை அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்.பல விஷயங்கள் மிகவும் தாமதமாகப் புரிந்தது.எந்த ஒரு செயலை செய்யும்போதும் மிகவும் கவனமாக செய்யவேண்டியிருக்கிறது.ஏனெனில் நாம் செய்யும் செயல்களே நமக்கு எதிரியாகவும்,நாம் சொல்லும் சொற்களே நமக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படக்கூடியவையே.
                                               சிறிதுநேரத்தில் என்னுடலை குளிப்பாட்ட வேண்டும் என்றார்கள்.நான் படுக்கையில் இருந்தபோது என் அம்மாதான் என்னைக் குளிப்பாட்டுவாள் மன்னிக்கவும் சுத்தப்படுத்துவாள்.ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து,அதில் துணியை நனைத்து உடம்பெல்லாம் துடைத்து விடுவாள்.இன்று பலர் மத்தியில்,ஒருகுடம் தண்ணீரை எடுத்துவந்து என்னுடலின் மீது அப்படியே சாய்த்துவிட்டனர்.என் அம்மா ஓவென்று கதறினாள்.வெளியில் சென்றிருந்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டின்முன் கூடிவிட்டனர்.அப்போதே எனக்குப் புரிந்தது.என் உடலை வெளியேற்ற தயாராகி விட்டார்கள் என்று.சிறிதுநேரம் கழித்து,எல்லாரும் என் உடலை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்கு கொண்டுசென்றனர்.போகும்போதே,என்னுடன் வருபவர்கள் எல்லாம் குளிக்கவேண்டும் என்று இறைவன் நினைத்தானோ என்னவோ மழை வந்தது.பலர் என் உடலைவிட்டு ஓடி ஒதுங்கினர்.ஒருசிலர் குடையில் தன்னை மறைத்துக் கொண்டனர்.வானம் மனிதனை சுத்தப்படுத்தவும், சுகப்படுத்தவும் தண்ணீரை சல்லடைமூலம் சலித்துத்தருகிறது. ஆனால் இந்த மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.கொஞ்சநேரம் கழித்து என் உடலை மேலும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு குழிதோண்டி வைத்திருந்தனர்.
                                            நான் எப்போதுமே என் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிவிட்டாலே பத்துமுறை கழுவுவேன்.ஆனால் இப்போது சேறு போன்று இருந்த மண்குழிக்குள் என் உடலை வைத்து மூடினர்.எனக்குரிய சொந்த இடம் அதுதான் என்று சொல்லிக்கொண்டனர்.நான் முன்னமெல்லாம்,எவ்வளவோ அதிகாரம் பண்ணவேண்டும்,நிலங்கள் சொத்துக்களைச் சேர்த்து வாழவேண்டும் என்று எண்ணியதுண்டு.ஆனால் இப்போது இவர்களாகவே ஒரு குறிப்பிட்ட இடத்தை எனக்கு தானமாகக்கொடுத்து,என் ஆசையினை முட்டிவிற்கு கொண்டுவந்து விட்டனர்.இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது என்று எனக்குப்புரிந்தது.பின்னர் எல்லாரும் அவன் மறைந்துவிட்டான் என்று கூறிக்கொண்டு சென்றுவிட்டனர்.ஆனால் நான் மட்டும் பரவசநிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறேன்.நான் இருப்பதும், அவர்களைப் புரிந்து கொண்டிருப்பதும் யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் நான் எங்கிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனாலும் நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------
                நீ இந்த பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன்தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச்சுரக்க வைத்தவன் இறைவன்.நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட, அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.
                                                                -தாகூர்

4 comments: