Wednesday, 10 December 2014

சிங்கம் PART 3


                             போதைமன்னன் டேனியை அரெஸ்ட் பண்ண கையோட, அவனுக்கு தண்டனை வாங்கி தர்றதுக்கு எவிடென்ஸ் கலெக்ட் பண்றதுக்காக சுவிட்சர்லாந்து போறாரு துரைசிங்கம். யாருக்கும் சந்தேகம் வராம இருக்குறதுக்காக, சுவிட்சர்லாந்துல இருக்கும் "காளியம்மன் மாரியம்மன் இன்டர்நேஷனல் பேங்க்"ல செக்யூரிட்டியா வேலைக்கு சேர்றாரு. அப்போதான் டெய்லி இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அங்கு வந்து போறதைப் பாக்குறாரு. உடனே தனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ற அமைச்சருக்கு மிஸ்டுகால் குடுக்குறாரு. அமைச்சர் அரசாங்க போன்ல கால் பண்ணி,
"என்னாச்சு துரைசிங்கம்"
"சார்.. நாம நினைச்சது மாதிரி இல்ல சார்.அதைவிட இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கிற மாதிரி கருப்பு பணத்தை எல்லாம் பதுக்கி வச்சிருக்காங்க"
"இப்ப என்ன செய்யுறது துரைசிங்கம்"
"கொஞ்சம் சுண்ணாம்புக்கல்லும், ஒரு தென்னைமட்டை பிரஷ்ஷும் அனுப்பி வைங்க.வெள்ளை அடிச்சு வைக்கிறேன். உடனடியா ஒரு ஆபரேசன் பண்ணனும் சார்"
"ஏதாவது கல்லடைப்பா துரைசிங்கம்"
"சார்.. பதிலுக்கு மொக்கை போட்டது போதும். உடனே "ஆபரேஷன் பி" ஸ்டார்ட் பண்ணனும். பி ஃபார் பிளாக் மனி"
"என்னாது பிளாக் மனியா.."
"ஆமா சார்.நீங்க உடனடியா நம்ம பிரதமர்கிட்ட பேசுங்க"
"என்னாது பிரதமர்கிட்ட பேசணுமா.."
"யோவ்..நான் சொல்றதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கியா.. இரு இந்தியா வந்து உன்னை வச்சிக்கிறேன்"
....போன் கட். (இடைவேளை)
                                           ஆபரேசன் பிளாக் மனிப்படி, துரைசிங்கம் பழைய பேப்பர் வாங்குற ஆளு மாதிரி ஒவ்வொரு பேங்க்கா போயி, "பழைய நோட்டு இருக்கா.. பழைய நோட்டு இருக்கா"ன்னு கூவுறாரு. எந்த பேங்க்லயும் ஒரு தூசிகூட அசையல. எந்த பேங்க்லயும் எதுவுமே இல்ல. அப்போதான் தெரியுது டெய்லி அங்க வந்துபோன இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் பணம் போட வரலை.. போட்ட பணத்தை எடுத்துட்டு போகத்தான்னு. இப்போ துரைசிங்கத்தோட அடுத்த புராஜெக்ட் அந்த பணத்தையெல்லாம் தேடி, அண்டார்டிகாவுக்கு போறது தான்.

Wednesday, 9 April 2014

MUSIC

                                  அந்த ஊரில் இருக்கும் எல்லாருமே இசைப்பிரியர்கள். இசைப்பிரியர்களில் இரண்டு வகைதான். ஒன்று, பாட்டு பாடுபவர்கள்.இரண்டு, பாட்டு கேட்பவர்கள். அதில் உயர்திணை, அஃறிணை எல்லாம் கிடையாது. பாட்டாலேயே அந்த ஊர் இயங்கியது என்றே சொல்லலாம். நாற்று நடுவதானாலும் சரி, அறுவடையானாலும் சரி, வேலை நடக்குதோ இல்லையோ, பாட்டு மட்டும் வேளாவேளைக்கு பாடி விடுவார்கள்.

                                       ஒருமுறை பசுமாட்டுக்கு மடியில பால்கட்டி, பால்சுரக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. மாட்டுக்காரன் டாக்டர்கிட்ட போகலை.நேரா பசுநேசன்கிட்ட தான் போனான்.பசுநேசனும் விசயத்தை கேள்விப்பட்டவுடன், வேட்டியக்கூட கட்டாம போட்டுருந்த டவுசரோடயே போயிட்டாரு. போன வேகத்துலயே, "செண்பகமே.. செண்பகமே"ன்னு பாட்டை அவுத்து விட்டாரு. அதைக்கேட்ட பசு,அய்யய்யோ இந்தாளு காதுல ரத்தம் வரவச்சிருவான் போலேயேன்னு பயந்து, பாத்திரம் பத்தாத அளவுக்கு பால் குடுத்துச்சு. இன்னொருநாள் ஜல்லிக்கட்டு நடந்துச்சு. பேச்சியம்மன் கோயில்காளை எவனுக்கும் அடங்காம ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்துச்சு. அங்கேயும் காளைக்கு முன்னாடி துணிச்சலா நின்னு, "பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி"ன்னு பாடுனாரு. அதைக்கேட்ட காளை, ஆளைவிடுறா சாமின்னு ஊரைவிட்டே ஓடிருச்சு. இந்த அதிசயத்தை கேள்விப்பட்ட பாம்பேயில இருந்து வந்த லிவிங்ஸ்டன் இன்னிசைக்குழுவினர் அவரை அள்ளிக்கிட்டு போயிட்டாங்க. அவரும் பெரிய பாடகராகி அங்கேயே செட்டிலாயிட்டாரு. இப்போ பாப் பாடகர்களுக்கு செம டஃப் குடுப்பதாக கேள்வி. பசுநேசன் ஊரைவிட்டு போனதுல ஊர்மக்கள் ரொம்ப ஹேப்பி.

                                                    அடுத்ததா அந்த ஊருக்கு வந்தவர்தான் சின்னத்தம்பி. அவர் பாட்டு இல்லாம எந்த கொண்டாட்டமும் முழுமையடையாது. அவர் பேருதான் சின்னத்தம்பி, ஆளைப்பாத்தா நீர்யானை மாதிரி இருப்பாப்ல. உடல்வாகுல அந்த ஜில்லாவுலேயே அவர்தான் பெரியதம்பி. அம்பி கொழுகொழுன்னு அமுல்பேபி மாதிரி இருக்கானேன்னு எல்லாரும் கொஞ்சுறதை, தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான் சின்னத்தம்பி. அவர் லேடீஸ் விசயத்துல வீக்குன்னு தெரிஞ்ச ஊர்க்காரங்க, பக்கத்து ஊர்ல இருந்து துணைநிலை ராணுவப்படையை வரவழைச்சு, ஏதோ தீவுக்கு அனுப்பினதா ஒரு பேச்சு அடிபடுது.

                                                     அந்த ஊர்ல நல்லா பாடி, பேருவாங்குனதுன்னா வெள்ளைச்சாமியும், சின்ராசுவும் தான். அதுல வெள்ளைச்சாமி சீனியர். அதுக்கு அப்புறம்தான் சின்ராசு. ராத்திரி எட்டு மணிக்கு அலாரம் வச்சிட்டுத்தான் பாடுவாங்க. ரெண்டுபேருக்குமே காதல் தோல்வி. அதிலேயும் வெள்ளைச்சாமியோட, "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" பாட்டும், சின்ராசுவோட, "ரோசாப்பு சின்ன ரோசாப்பு" பாட்டும் ரொம்பவே பிரசித்தம். அவங்க பாட்ட கேட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும், அவங்களோட காதல்தோல்வியின் காரணம். பாட்டு பாடுறேன் கேளு.. கேளுன்னா, எவ அவனோட குடும்பம் நடத்துவா.

                                                     இதுக்கெல்லாம் முடிவு கட்ட, அந்த ஊர்ல இருக்குற ஒரு பெரியவர் துணிஞ்சிட்டார். அவர்தான் வெள்ளியங்கிரி தாத்தா. அவர் மிருதங்கத்தை எடுத்து, "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" ன்னு பாடுனதைக் கேட்டு, அந்த ஊர்ல ரெண்டுமுறை பூகம்பமே வந்துருச்சு. அதுக்கப்புறம் தான் ஊரே ஒண்ணுகூடி, இனிமே இந்த ஊர்ல யாரும் பாட்டுபாடக் கூடாதுன்னு தீர்மானம் போட்டு, ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வச்சிருக்காங்க.

Saturday, 7 December 2013

ஒரு குண்டு கலர் பந்தயம்

    கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதில் மகிழ்ச்சி என்பது நம்முடைய ஜீன்லயே  கலந்தது போல.அதன் தூண்டுதலாக ஒவ்வொரு நாள் சாயங்காலமும்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டருக்கு வரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதற்காக, நண்பர்கள் புடைசூழ ஒரு நடை போய்விட்டு வருவதுண்டு.அது நம்ம கேப்டன் நடித்த “உழவன் மகன்” வெளிவந்திருந்த சமயம்.செம கூட்டமுன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சு. பக்கத்து ஊருக்காரங்கெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா வந்துருக்காங்கன்னு சொன்னவுடனே, வழக்கம் போல கெளம்பிட்டோம் நம்ம கேங் ஆளுங்களோட வேடிக்கை பாக்க.
                                                 நம்ம கேங்ல மார்க்ஸ்னு ஒருத்தன் கூடவே வருவான். அவனுக்கு கம்யூனிஸம்னா என்னான்னே தெரியாது.அவனோட அப்பா கம்யூனிஸ்டா என்னான்னு எங்களுக்கு தெரியாது.அவரு ஏதோ ஆசையில, மகன் பெரிய புரட்சியாளரா வருவான்னு நெனைச்சிட்டு பேரு வச்சிட்டாரு போல.இன்னமும் இதே மாதிரி ஊருக்குள்ள நெறைய பேரு, பேரு வச்சிக்கிட்டு திரியுறாங்கன்றது வேற விஷயம்.நம்ம மார்க்ஸ் ஒரு வெள்ளந்தி.நம்ம பயலுக அவனை பலவிதமா பேர் சொல்லி கூப்பிடுவானுங்க. மார்க்கஸு, மார்க்கோஸ்,மார்கஸ்,மாரஸ்னு. நல்லவேளை அப்போ  யாருக்கும் சரக்கு பேரு தெரியாததுனால மார்பியஸ்னு கூப்பிடல.(கோடான கோடி நன்றிகள் ஏசப்பா).நம்மாளு செம கலரா இருப்பான். புயல் மழையில நனைஞ்ச வயசான பனைமரம் போல.அவன் கலருக்கு அவன் மண்டைமுடி பிச்சை வாங்கணும்.ஆனா அவன் பல்லை பாத்தோமுன்னா, முத்து நமக்கு கருப்பா தெரியும். தாஜ்மகாலுக்கு கட்டுன பளிங்கு கல்லாட்டம் பளீர்னு ஜொலிக்கும்.சரி மேட்டருக்கு வருவோம்.மேட்டர்னா கதை தான்.
                                                       உழவன் மகனுக்கு வந்த கூட்டத்தை பார்க்க வழக்கம் போல போகும்போது ,திடீர்னு ஒரு போட்டி வந்துருச்சு.எதுத்தாப்புல வர்ற மொத பஸ்ஸோட கண்ணாடிய ஒரே கல்லுல உடைக்கணும்னு. கல்லெறியுறதுல கில்லாடி,எங்க கூட இருக்க மண்டையன் தான்.பத்து சிட்டுக்குருவிய ஒத்தைக்கல்லுல விழுக்காத்தட்டிருவான்.அவன் குறிக்கு ஒருகல் போதும்.மறுகல் தேவைப்படாது.குண்டு வெளாட்டுலேயே ஊறிப்போயி பக்கத்து ஊர்க்காரப்பயலுகள போண்டியாக்குனவன்.ஒரே கல்லுல பஸ் கண்ணாடிய உடைச்சா,ஒரு குண்டு கலரு பந்தயம்.மண்டையன் ரெடியாயிட்டான்.வாகா ஒரு கல்லை எடுத்து தூரத்துல வர்ற ராணி மங்கம்மா பஸ்ஸை பாத்துக்கிட்டு,புளியமரத்தடியில நின்னான்.கூடப்போன பயலுகளுக்கெல்லாம் அவனே ஒரு வேடிக்கையா இருந்தான். கம்பத்துக்கு போற ராணி மங்கம்மா பக்கத்துல வந்துருச்சு.மண்டையன் குறியெல்லாம் வைக்கல.கைக்கு தெரியும்ல அதோட குறி.ஒரே எறி.பஸ் கண்ணாடி படார்னு கல்கண்டு மாதிரி நொறுங்கிருச்சு.கண்ணாடி தெறிக்குறதுக்கு முன்னாடியே நம்ம பயலுக ஓடிட்டாங்க,தீக்கொழுத்தி மடத்துக்கு எதுத்தாப்புல இருக்க தென்னந்தோப்புக்கு.
                            பஸ்ஸை நிப்பாட்டிட்டு டிரைவரும்,கண்டக்டரும் கல்லை எறிஞ்சவனை தேடுறாங்க.அன்னிக்கு அமாவாசை இருட்டு மாதிரி இருக்கு. இப்போவே நம்மூரு அப்படித்தான் இருக்கு.அப்போல்லாம் சொல்லவா வேணும்.நம்ம பயலுக ஓடிப்போயி ஆளுக்கொரு தென்னைமரத்தை அணைவா புடிச்சு, மறைவா நிக்குறாங்க.கண்டக்டரும்,டிரைவரும் கண்ணை தேச்சுக்கிட்டு தென்னந்தோப்புக்குள்ள தேடுறாங்க.மார்க்ஸ் ஒரு குட்டி தென்னம்பிள்ளைகிட்ட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்.கண்டக்டரும் அவன் பக்கத்துலேயே நின்னுக்கிட்டு  தேடுறாரு.ஆனாலும் அவனை கண்டுபிடிக்க முடியல. இருட்டுல அவன் மேட்ச் ஆயிட்டான்.கால்மணி நேரமா அவன் பக்கத்துலயே ஆளை தேடுறாரு கண்டக்டர்.மார்க்ஸ்க்கு சிரிப்பை அடக்க முடியல.பக்கத்துல நிக்குற என்னையே கண்டுபிடிக்க முடியலையே, இந்தாளெல்லாம் எப்படி டிக்கெட் போடப்போறாரோன்னு, அடக்க முடியாத சிரிப்பை அவுத்து உட்டுட்டான்.பளீர்னு தெரிஞ்ச அவனோட முத்துப்பல்லை அடையாளம் கண்ட கண்டக்டர்,ஒரேயடியா அவனைப் புடிச்சுக்கிட்டு, “கல்லெறிஞ்சவனை கண்டுபிடிச்சிட்டேன்”னு டிரைவர்கிட்ட சவுண்டு விடவும், அவனை பிடிச்சுக்கிட்டு வண்டிய கெளப்பிட்டாங்க கம்பம் டிப்போவுக்கு.
                               பஸ்ஸுல மார்க்ஸை ஏத்திக்கிட்டு போனது தான் தாமதம். ஒளிஞ்சிருந்தவய்ங்க ஊருக்குள்ள தகவல் சொல்லிட்டாய்ங்க.ஆனா மார்க்ஸ் மட்டும் , ”காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு பஸ் ஜன்னல் வழியா கத்திக்கிட்டே கம்பம் டிப்போவுக்கு போயிட்டான்.விஷயம் தெரிஞ்ச மார்க்ஸோட மாமா,டிப்போவுக்கு போயி,கண்ணாடிய உடைச்சதுக்கு எண்ணூறு ரூவா அபராதமும்,இலவச இணைப்பா சிலபல அடிகளும் கொடுத்து மார்க்ஸை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.அப்படி வந்த மறுநாள் தான் மார்க்ஸ், மண்டையனுக்கு குண்டுகலர் வாங்கிக்குடுத்தான்.

Saturday, 16 November 2013

அணையாத காமம்

சுக்கிலத்தை சுரக்கும் முயற்சியில்,உள்ளறையில் கேட்கும் ஈனக்குரல்.அதற்கு குறுக்கு கோடாக பிளேடை கூர்மைப்படுத்தும் ஓசை.அவனது இசையும்,ஓசையும் ஒன்றே;இரண்டையும் கேட்டுக்கொண்டே செயல்படும் லாவகம் அவனுக்கொன்றும் புதிதல்ல.இத்தோடு பதிமூன்று.பயன்படுத்திய மூன்றோ நான்கோ தான் இசையுடன் உச்சமுற வைத்தவை.ஆனால் இவளின் முனகலெனும் அப்பாற்பட்ட இசை என்றுமில்லாத எழுச்சியை தூண்டி,வேலையில் வேகமுற வைக்கிறது.கிரஹப்பிரவேஷம் செல்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்,வீட்டை இடிக்கையில் ஏற்படும் பரவசம் ஒருபுறம்.இரண்டும் சேர்ந்த எதையும் சேராதவன் தான் இவன்.                                                                                                                                                                                                                                                               அவள் கண்களுக்கு அடைக்கப்பட்ட கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்: இவன் கண்களுக்கு கதவை திறந்தால் மருண்டவிழி பார்த்தவுடன்,இதுவரை ஓசையெழுப்பிய பிளேடு பயன்படுத்தப்படும்.அவனை உச்சமடையச் செய்ய அவனுக்கென்ன தயக்கம்.அவனுக்கென்ன அவள் பொண்டாட்டியா..தன்னை வருத்தி உறவுகொள்ள.. ரசிக்கவும்,புசிக்கவும் பெண் மட்டுமல்ல,ஆணும் தான்.ஆனால் இவன் இரையல்ல.இவனுக்கு புசிப்பதே குறி.. அதுவே அவனது குறிக்கு குறி... பெண்ணை மென்மையாக கையாளுவதில் சிறந்த அவன்,வலியற்றிருக்கயெண்ணி மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக மெதுவாக அவளது அமுதக்குரல்வளையை கலைநயத்தோடு ஓவியன் கோடுவரையும் லாவகத்தோடு அறுக்கையில் காதலைவிட உயிர்தெறிக்கும் கண்களை பார்ப்பதிலே அவனுக்கு எச்சமில்லா உச்சம்.

இன்றிருப்பவள் காதற்கடவுளா..காமக்கடவுளா... விவரிக்க அவனொன்றும் அதற்குள் அடங்கியவனா? அவள் அதற்குமப்பால் எனுமெண்ணம் இதுவரை அடைந்த இன்பமெல்லாம் துன்பமென்னும் சேதி விளித்து, உச்சத்தை ஏற்படுத்திய அவளை உபயோகப்படுத்த வேண்டுமென, கூர்மைப்படுத்தி உயரத்தூக்கிய பிளேடால் உயரத்தூக்கிய குறியை ஒரேவெட்டு.

Tuesday, 18 December 2012

பாலாவின் கடவுள்

அனைத்து பற்றுக்களையும் துறந்துவிட்டு வாழ்வின் இறுதியை நெருங்கிய அநேகமக்கள் கூடும் இடமான காசியில் இருந்துவரும் பலபிரிவு சாமியார்களையும், அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியுமே கூறுகிறது படத்தின் துவக்கம்.இறுக்கமான சிந்தனையை காட்டும் முயற்சியில்,யாருமே நுழையத்தவறிய,தயங்கிய தளத்தில் பயணித்த பாலா,ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை எழுத்திலிருந்து திரைக்கு மாற்றியுள்ளார். ஏழாம் உலகம் கடவுளைப்பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையாததால்,அதனைக் கொண்டுசேர்க்கும் முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாலாவின் இந்தப்படம்.வாழ்வின் மிச்சத்தைக் கழிக்க அநேகமக்கள் தேர்ந்தெடுக்கும் இடமான காசியில்,சாமியார்களாக இருப்பவர்களின் அடிப்படைத்தேவைகள் எளிதில் பூர்த்தியடைவதால், மிகுதியான சாமியார்களின் களமாக காசி இருந்துவருகிறது என்பதுடன் துவங்கும் இப்படத்தில்,மூத்த சாமியார் ஒருவரால்,”மேரே ப்ரம்மா,மேரே ஈஸ்வர்,அஹம் ப்ரம்மாஸ்மி” என்று உருவாக்கப்படுகிறார் கதாநாயகன். துஷ்டர்களை இனம் காணும் தன்மையும்,அழிக்கும் மனோதிடமும் உள்ளவனாக சித்தரிக்கப்பட்டுள்ள கதையின் நாயகன்,அதே மனநிலையுடன் (சொந்த)ஊருக்கு வருகிறான்.வாழ்வின் உச்சநிலையைக் கழிக்கவரும் மனிதர்களை மட்டுமே சந்தித்த அவன், வாழ்க்கையின் போக்கில் இருக்கும் மனிதர்களை சந்திக்கிறான்.இருந்தாலும் பழக்கப்பட்ட எண்ணத்தை மாற்றமுடியுமா என்ன?.அவன்தான் முக்திதேடும் மனிதர்களாலும்,நீதான் கடவுள் என்று கூறுபவர்களாலும் உருவாக்கப்பட்டவன் ஆயிற்றே.அதனால்தான் களம் வேறுபட்ட போதிலும் அவனின் மனநிலை அப்படியே இருக்கிறது.ஆகவே அவன் அம்மாவிடம் பேசும்போது,”ஐயிரண்டு திங்களாய்.....” என்ற பாடலை சொல்லுவதோடு,அந்தப் பெண்மணியிடம்,”தூமைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்கிறான்.வசனகர்த்தா அந்தக்கேள்வியை அவளிடம் கேட்கிறாரா? அல்லது பார்வையாளர்களிடம் கேட்கிறாரா? என்பதே ஒரு கேள்வி. பிச்சையை மட்டுமே அறிந்தவர்களையும்,அடித்து துன்புறுத்தப்பட்டு பிச்சைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும்,வியாபாரப்பொருட்களாக முதலீடு செய்து,விலைக்கு வாங்கி பிச்சைக்கு பயன்படுத்தப்படுபவர்களையும் காட்டும்போது இயக்குநரின் தந்திரம்,இளகிய மனதினரின் கழிவிரக்கத்தை காசாக்க முயற்சி செய்கிறது.இதில் மனதிற்கு இதமாக(?) அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிவேறு.அப்போதுதானே தட்டில் அதிக காசு விழும். இதுபோன்ற மூர்க்க சிந்தனைகளையெல்லாம்,வலிமையான சினிமாவாக காட்டுவது என்பது பாலாவிற்கே உரித்தான பாணி.தமிழில் ஓர் உலகசினிமா என்று பறைசாற்றினாலும், குத்துப்பாட்டு என்ற முக்கிய அம்சம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த இயக்குநர்,இதில் அந்தக்குறை தெரியாமல் இருக்க,எம்.ஜி.ஆர்,சிவாஜி,சிம்பு பாடல்களைக்காட்டி தீவிரத்தை உணர்த்துகிறார். பின்னர்தான் கடவுளை பற்றிய விளக்கங்களை பாலா மற்றும் ஜெயமோகன் கூட்டணி விளக்கத்தொடங்குகிறது.தமிழ்சினிமாவில் இதுவரை எந்தப்படத்திலும், எந்த ஹீரோவும் கெட்டவர்களை அழித்ததில்லை(?).ஆனால் இதில் மட்டுமே பாலாவின் கடவுள் கெட்டவர்களை அழிக்கிறார்.இவர் மட்டுமே தன்னைக் கடவுள் என்று அறிவிக்கிறார்.ஏனெனில் பாலாவின் கடவுள் மட்டுமே,தான் நுகரும் பொருட்களில் அதிகமாக கஞ்சாவும்,வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளில் கொஞ்சம் சமஸ்கிருதமும் பயன்படுத்துகிறார். எல்லாரும் வணங்கும் சாமிக்கு கையில்லை,காலில்லை,வாய் பேசாது, கண் பார்க்காது,காது கேட்காது என்று உருவகப்படுத்திய இயக்குநர்,கடவுளின் கிருபையால் சாமி உயிருடன் இருப்பதுபோல காட்டிவிட்டார்.கதைக்கு தேவையோ என்னவோ சாமி சிலநேரம் பார்க்கவும் செய்கிறார்,பேசியும் விடுகிறார்.கடவுளின் இருப்பைக்காட்டி ஒருபுறம் சினிமா எடுத்து பணம் சம்பாதிக்கும்போது,கடவுளின் செயல்பாடு இல்லாநிலையைக்காட்டி (மௌனம் என்றுகூட சொல்லமுடியாது) பணம் சம்பாதிப்பதையும் குறைசொல்ல முடியாது. அதுதானே ஜனநாயகம்.அதிலும்,”அட நீ என்ன முருகா! வர வர பிச்சக்காரங்யகிட்டயே பிச்ச கேக்க ஆரம்பிச்சுட்ட” என்ற வசனம் சொல்லி,பிச்சைக்காரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் போது அதுவும் ஜனநாயகம். தான் பிச்சையெடுப்பதை குறையென்று உணரமுடியாத அளவிற்கு பழக்கப்பட்ட சிறுவனின் நக்கல் பேச்சின் வாயிலாக ஜெயமோகன்,”முருகா..நீ பாட்டுக்கு கோவிச்சுக்கிட்டு மலைக்கு மலை தாவிட்டு போயிட்ட..நாங்கல்ல பிச்சையெடுக்க கஷ்டப்படுறோம்” எனும்போது பணம் சம்பாதிக்க அவர் கையாளும் யுக்தி புரிகிறது.மேலும், “ஏய் மொட்டை..அன்னக்காவடி..பிச்சை போடுறா” “அன்ன லச்சுமி..ஆதி லச்சுமி... மகாலச்சுமி... அடியே ஜோதிலச்சுமி.காது கேக்காதது மாதிரி போறவ”.இந்த வசனத்திற்காகவே எல்லா லட்சுமிகளும் திரு.ஜெயமோகனின் வாசல்கதவைத் தட்டுவார்கள். இப்படித்தான் போகின்றன காமெடி என்ற பெயரால் காட்சிகள்.அதிலும் அந்த அரவாணி சாமியிடம்,”சாமி இத்தன வருசமா உன்ன மட்டும்தான சாமின்னு சொல்லிக்கிட்டு (நம்பவில்லை) இருக்கோம்.நல்ல வழிகாட்டு சாமி..இதுக்கும் மேல பேசாம இருந்து இவ சீரழிஞ்சு போனா நீ நாசமா நரக்கழிஞ்சு போவ” என்று சாபம் விடுகிறா(ள்)(ன்). கதையின் போக்கை சுவாரஸியமாக நகர்த்த ஏதோ போனால் போகட்டும் என்று சாமிய பேச வைத்துவிடுகிறார் பாலா.ஈனப்பிறவிகளின் குரலாக,”பாத்துப் புழுத்துறான்..தேவடியா மகன்” என்பது போன்ற சிறந்த வசனங்கள் ஜெயமோகனை ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.கதைக்கு தேவையான மிக இயல்பான வசனங்கள் இவை. பிச்சைக்காரர்களின் கூட்டத்தலைவனின் முகவராக வரும் முருகன் கதாபாத்திரம்,எந்த வகையான மனநிலை கொண்டவன்?சுயநலத்திற்கு கடத்திவந்து,நானும் உன்னைப்போல பிச்சைக்காரிக்கு பொறந்தவந்தான் தங்கச்சி என்று சென்டிமென்டாய் பேசி பிச்சையெடுக்க வைப்பான்.சாராயம் குடித்துவிட்டு வந்து,பிச்சைக்காரர்களுக்கும் சாராயம் வாங்கிக்கொடுத்து,சந்தோசமா இருங்க,வாழ்க்கையில் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறுவான். அவன் தான் பிச்சைக்காரர்களின் கடவுளா பாலா சார்?.போதை அதிகமான பிறகு,பணத்தை அள்ளிவீசி,இதெல்லாம் நீங்க எனக்குப்போட்ட பிச்சை என்று வசனம் பேசுவான்.அவனுடைய பிச்சைக்காரர்கள் அவனுக்கு மட்டுமே சொந்தம்,வேறு யாரும் அவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சுயநலத்தால் கையாளும் யுக்திகள்தானா இவை. ஒருவேளை கதாநாயகியை காப்பாற்ற நினைக்கிறானா? அல்லது அவள் வாழ்வை சீரழிவில் இருந்து காக்கவா?.இதில் அவ்வப்போது ஆறுதல் வேறு.நல்லவேளை படத்தில் சாமிவேஷம் போட்ட எந்தப்பிச்சைக்காரனையும் யாரும் தூக்கிப்போகவில்லை.இல்லையெனில் வசனகர்த்தாவிற்கு அல்வா சாப்பிடுவது போல வசனம் எளிதாக உதித்திருக்கும். படத்தில் காதாபாத்திரங்களாக நடித்தவர்களின் உழைப்பு நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.கூடவே அவர்களின் எதிர்காலமும்(இனி பூஜாவை கனவிலும் நினைக்க மாட்டார்கள்).இசையென்ற அமைப்பு மட்டும் இல்லாதிருந்தால்,சம்பந்தமில்லாத இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் மனதைப் போல இருந்திருக்கும்.வழக்கம்போல மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.இசைப்பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்.அதிலும் ரமணமாலையில் இருந்து எடுத்து வழங்கியிருக்கிற,”பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்” பாடல் கனிய வைக்கிறது.ஏனோ துரதிர்ஷ்டம் காட்சியமைப்புகள் ஒத்துவரவில்லை.ராஜாசார் தயவுசெய்து இந்தப்பாடல்களை இதுபோன்ற சினிமாவிற்கு எடுத்தாளாமல் இருப்பது நன்று. முடிவில் படத்தில் ஈனப்பிறவியாக வரும் கதாநாயகியின் வாயிலாக, “நான் என்ன பாவம் செய்தேன்?என்னை ஏன் ரட்சிக்கவில்லை?” “எல்லா புகழும் இறைவனுக்கே..என்னைப் போன்றவர்களை படைத்தது அந்த இறைவனுக்கு பெருமையா?” “காளியாத்தா..மாரியாத்தா..இப்படி எந்தச்சாமியுமே என்னைக் காப்பாத்தவில்லையே” போன்ற கேள்விகளை பாலா முன்வைத்து,அவரே தீர்வும் சொல்லி விடுகிறார்.அந்தப்பிறவியில் இருந்து காக்கவும்,அடுத்த பிறவியில் இருந்து விடுவிக்கவும் அவனால் தான் முடியும்.ஈனப்பிறவிகளுக்கு மரணம்தான் தீர்வு.மூர்க்கச்சிந்தனையின் முடிவாக,வாழ இயலாதவர்களுக்கு அவன் அளிக்கும் வரம் மரணம்.அவன்தான் பாலாவின் கடவுள்(ஏனெனில் பிற கடவுள்கள் பிணத்தை உண்பதில்லை). குறிப்பு:சிலபடங்கள் எடுத்து முடிந்த பின்னர் தாமதப்படுவதைப்போல,ஏற்பட்ட தாமதம்.

Saturday, 8 December 2012

எனது ட்வீட்டுகளில் சில..

நீ நல்லவன் தான்.ஆனா உன்னை சுத்தி இருக்கிறவங்க தான் கெட்டவங்ய #என்னை சுத்தி இருக்கிறவன் சொன்னது ____________________________________________________________________ ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமெனில், இறைவன் தற்காலிகமானவனே.. ____________________________________________________________________ திரைப்படங்களை ஆடியோ கேசட் வழியாக கேட்டு இன்புற்றது எமது சமூகம் மட்டுமே..அவ்வளவு கிரியேட்டிவிட்டி... _____________________________________________________________________ கடவுளுக்கு பூமி மிகவும் பிடித்துவிட்டது போல.ஆகவே குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கிறார்.. _____________________________________________________________________ ஆரம்ப கலவி மிக முக்கியமானது.. ______________________________________________________________________ உயிர் போகும் இறுதி நொடியில் இருக்கும் யோக்கியனாக ,வாழ்நாள் முழுதும் வாழ ஆசை.. _______________________________________________________________________ முடிவு என்பது ஒருமுறைதான்..அதை மாற்றினால் அது இன்னொரு ஆரம்பம் தான்.. ______________________________________________________________________ நீ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கெட்டவன் அல்ல.உனது அம்மாவால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நல்லவனே.. _______________________________________________________________________ எல்லாருக்கும் தெரிந்த போலியான உரையாடல், “எப்படியிருக்கே” “நல்லாயிருக்கேன்” என்பதே.. ______________________________________________________________________ ரத்தத்தை விட கண்ணீர் வலிமையுடையது.. _____________________________________________________________________ சுருங்கிய ரத்ததுளியின் நீட்சியில் பிரதிபலிக்கிறது உனது பிம்பம்.. ____________________________________________________________________ விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது காதல்... ____________________________________________________________________ கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்குன்னு வருத்தப்படாதீங்க.. கம்ப்யூட்டரை விட நீங்க ஸ்பீடா இருக்குறதா எண்ணி மனச தேத்திக்குங்க..#அவ்வ்வ் ____________________________________________________________________

Sunday, 8 April 2012

எல்லா திசைகளும் பாதைகளே..

                            கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும்.ஆனால் அதே கஷ்டம் அளவிற்குமீறி வந்தால்,கடவுளை திட்டத்தான் செய்வார்கள். அதனால்தான் எப்போதும் கடவுளை வணங்கும் கூடலிங்கம்கூட அன்று திட்டிக்கொண்டு இருந்தார்.இதேபோன்ற ஒரு சூழ்நிலைதான் நாற்பது வருடங்களுக்குமுன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரத்தூண்டியது. அன்றைக்கு கூடலிங்கம் தனிமனிதன்.விட்டுச்செல்ல ஒன்றுமில்லாததால் நினைத்தவுடன் எங்கும் செல்லும் மனோநிலை இருந்தது.பெரும்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகளை எல்லாம் இழந்து,உயிர்வாழ ஊரைவிட்டு, நாட்டைவிட்டு  நடப்பது நடக்கட்டும் என்றுதான்,அன்று இலங்கை வந்தார்.வந்தபின் உழைத்து மீண்டும் புது உறவுகளை உருவாக்கி, சமுதாயத்தில் முக்கியப்புள்ளி என்ற நிலைக்கு வந்தபின்பும் கஷ்டம் மட்டும் விட்டு விலகவில்லையே..கண்ணுக்கு கண்ணான மனைவி,கவலைகள் போக்க குறைவில்லாத குழந்தைகள் எட்டு,அரண்மனை போன்ற சொந்தவீடு, விவசாயம் செய்ய குளத்துடன் கூடிய நாற்பது ஏக்கர் நிலம்,நூற்றுக்கணக்கான மாடுகள் இவைகளெல்லாம் தனது சுயஉழைப்பால் வாங்கி வாழ்ந்துவந்தாலும், இப்போது உள்ள நிலை மிகவும் அபாயகரமானது.இந்த பூமியில் எந்தநேரம் யுத்தம் வருமோ?என்ன நடக்குமோ?என்ற பயத்துடனே வாழும்நிலை மிகுந்த கஷ்டம்தான்.
                                    வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது மகன் மற்றும் மகள்கள்தான் அவரது கவலைக்கு அடித்தளமிட்டவர்கள்.தினமும் அவர்கள் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் கூடலிங்கத்திற்கு சுத்தமாக உடன்பாடில்லை.தமிழீழம் பற்றி தீவிரமாக பேசும் நபர்களுடன் தனது பிள்ளைகள் வைத்திருந்த தொடர்பால்,தனது குடும்பம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.அதனாலேயே தற்போது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் கலந்தாகிவிட்டது.இனி எப்படி செல்வது என்பதைப்பற்றிய யோசனைதான்.கள்ளத்தோணி மூலமாகவாவது போய்விடவேண்டும் என்று கூறியிருந்தார்.இரு தினங்களுக்குப்பின் ஒரு தோணி கிளம்புவதாகவும், அதில் இடமிருந்தால் அவர்களை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருந்தார் அவருடைய நண்பர்.சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வெறும் மனிதராக செல்லும்நிலையில் இருந்தாலும், தன் பிள்ளைகளை திசைமாறவிடாமல்  கரைசேர்க்கும் முயற்சியில் இருந்தார் கூடலிங்கம்.இரண்டு நாட்களுக்குப்பின் அந்த படகில் இடமில்லையென்று நண்பர் சொல்லிவிட்டார்.ஆனால் மறுநாள் இரவு வேண்டிய ஒருவரின் படகு தமிழ்நாட்டிற்கு செல்வதாகவும்,அதில் அவர்களை ஏற்றி விடுவதாகவும் உறுதிகூறி,எப்போது,எங்கே வரவேண்டும் என்ற விபரத்தையும் சொன்னார் கூடலிங்கத்தின் நண்பர்.
                                                       மன்னாரில் இருந்து தலைமன்னாருக்கு மாட்டுவண்டியில் சென்று,இரவு அங்கு இருந்து படகில் கடல்வழியாக தமிழ்நாட்டை அடைவதுதான் திட்டம்.அதன்படி மறுநாள் மாலையில் தனது மனைவி,பிள்ளைகளை,கையில் என்னவெல்லாம் எடுத்துச்செல்ல முடியுமோ அவைகளை மட்டும் எடுக்கச்சொல்லி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டுக்கதவைப் பூட்டினார்.திரும்பாத வீட்டிற்கு பூடு ஒருகேடா?என புலம்பிக்க்கொண்டே,மாட்டுக்கொட்டகைக்கு சென்று,கதவைத்திறந்து மாடுகளை வெளியேற்றிவிட்டு,”எங்கேயாவது சென்று உயிர்வாழுங்கள்” என்றுகூறி,இத்தனைநாள் உழைத்த விவசாய நிலத்தை கடைசியாக பார்த்தவாறே நின்றுவிட்டார்.பிள்ளைகள் எல்லாம்,”அப்பா..சீக்கிரம் வாருங்கள்.இரவு நெருங்கிவிட்டது”என்று கத்தினர்.கூடலிங்கம் அவர்களை திரும்பிப் பார்த்தார்.அவர் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. அவர் நிலத்தைப்பார்த்து கலங்கினாரா?பிள்ளைகளைப் பார்த்து கலங்கினாரா? என்பதே புதிர்தான்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததைப்போலவே, தற்போது போவதை எண்ணி வருந்திக்கொண்டு கிளம்பினார் அவர்.
                                      தலைமன்னாருக்கு சென்று சேரும்போது,நன்றாக இருட்டிவிட்டது.அனைவரும் கீழே இறங்கி மாட்டுவண்டியை கடற்கரையிலேயே விட்டுச்சென்றனர்.அங்கு கூடலிங்கத்தின் நண்பர் நின்றிருந்தார்.அப்போது செல்லும் படகில் படகுக்காரரின் சகோதரிகள் இருவர் உடன் வருவதாகவும் கூறினார் அவர்.எல்லாரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.சற்றுநேரத்தில் படகுக்காரர் வந்தவுடன் அனைவரையும் படகில் ஏறி உட்காரச்சொன்னார்.சுமார் அறுபது பேர் இருக்கும்.அவரவர் கையில் ஆளுக்கொரு பையை வைத்திருந்தனர்.அனைவரும் உட்கார்ந்தபின்,படகு நகர ஆரம்பித்தது.கூடலிங்கத்தின் நண்பர் அனைவருக்கும் கையை ஆட்டி, விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.பயணம் ஆரம்பித்து சிறிதுதூரம் செல்லும்போதே,அலைகள் ஆளுயரத்திற்கு வந்து கொண்டிருந்தன.யாரும் சத்தம் போடக்கூடாது என்று படகுக்காரர் சொல்லியிருந்தார்.அதனால் படகு அலையில் ஏறி இறங்கும் போதெல்லாம் அனைவரும் மூச்சைப் பிடித்துக்க்கொண்டு  உட்கார்ந்திருந்தனர்.அப்போது படகில் சிறிதுநீர் ஏறியதால் பளு அதிகமாக இருந்தது.உடனே படகுக்காரர், எந்தக்கேள்வியும் கேட்காமல் அனைவரின் கையில் இருந்த பைகளையும் கடலில் வீசியெறிந்தார்.யாரும் எதுவும் பேசவில்லை.உயிர் பிழைத்தால் போதும் என்று மட்டும்தான் இருந்தனர்.கண்முன்னே சிலமீட்டர் தூரத்தில் பனைமர உயரத்திற்கு பெரிய அலை வந்து கொண்டிருந்தது.அனைவரையும் நன்றாக பிடித்துக் கொள்ளச் சொன்னார் படகுக்காரர்.அடுத்த நிமிடம் அந்த பெரிய அலை அருகில் வந்துவிட்டது.எல்லாரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அடுத்த நொடி தாழ்வாக இருந்த படகு செங்குத்தாக உயரத்திற்கு சென்றுவிட்டது.கடற்பரப்பு விரிவாக இருளைப் போர்த்திக்கொண்டு தெரிந்தது.சடாரென்று படகு கீழிறங்கி, வயிற்றில் புளியைக் கரைத்தது.இப்படி ஒவ்வொரு அலையையும் தாண்டி,பயணித்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் ஆகியிருக்கும்.படகு தென்கடல் ஓரமாக வந்து கொண்டிருந்தது.அப்போது படகுக்காரர் யாரும் வெளிச்சம் தரும் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்க்கொண்டார்.ஏனென்றால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து இருக்கும், அவர்கள் கண்ணில் சிக்கினால் சுட்டுக்கொன்று விடுவார்கள் .எல்லாரும் அதன்படியே இருந்தபோது படகு ஒருபெரிய கப்பல் அருகில் வந்துவிட்டதை படகுக்காரர் உணர்ந்தார்.
                                                       அது இலங்கை கடற்[படையின் கப்பல் அவர்களும் விளக்கை அணைத்துவிட்டு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால் தூரத்தில் வரும்போது தெரியவில்லை.அருகில் வந்தவுடன் கடற்படையில் ஒருவர் சிகரெட் பிடித்ததால் படகுக்காரர் பார்த்து விட்டார். வேறுதிசையை நோக்கி படகை செலுத்தினாலும் நகர மறுத்துவிட்டது.படைக்கப்பலில் ஒருவர் படகைப் பார்த்துவிட்டார்.உடனே அவர் மற்ற வீரர்களுக்கு சிங்கள மொழியில் ஆணையிட ஆரம்பித்தார்”அவர்களை சுடுங்கள்..அவர்களை சுடுங்கள்.”. அவ்வளவுதான்..படகில் இருந்த எல்லாரும் நீரில் குதித்து விட்டனர். படைக்கப்பலில் இருந்து விளக்கொளியும் அதைப்போன்றே தோட்டாக்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.கூடலிங்கம் குடும்பத்தாரும் ,படகில் வந்த பயணிகளும் தென்கடல் அலையடித்து ஒதுங்கிய மணல்திட்டுகளில் இருந்த கடற்தாவரங்களுக்கு இடையே மறைந்து கொண்டனர்.கப்பலின் விளக்கு வேறுதிசையில் தேடும்போது மணற்திட்டு வழியாக நகர ஆரம்பித்தனர். அந்த மணல்திட்டுகளின் கரையோரப்பகுதியில் கடல் நீர் நெஞ்சளவு இருந்தது.கடற்படையின் தாக்குதலில் பாதிப்பேர் உயிரிழந்து விட்டனர்.கணவன் இறந்ததை மனைவியும்,குழந்தை இறந்ததை தாயும் உணரக்கூட அவகாசமில்லாத நிலை அது.இதையெல்லாம் பார்த்த பிறருக்கு,அவர்களின் உயிர்மீதான வேட்கை அதிகரித்தது.வேகமாக கடலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போதுதான் முந்தினநாள் கிளம்பின படகு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு கவிழ்ந்து கிடப்பதை பார்த்தார்கள். ஆட்கள் தப்பியிருப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.இன்று நாம் இருக்கும்நிலையில்தான் நேற்றும் அவர்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்தவாறே வேகமாக நடந்தனர்.
                                                கடலுக்குள் இருந்து கரையை நோக்கி நடக்கும்போது கால்களில் சங்குகளும்,அதைப்போன்று இருந்த பொருட்களும் கால்களில் குத்தின.அடுத்து காலகளில் சில பிணங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. அவ்வளவுதான்..அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.பயத்தில் உடல் உதறியது.ஓர் அடிகூட நகர முடியவில்லை.நேற்றைக்கு வந்தவர்களின் உடல்களை மீன்கள் உண்டு, மீதியாக கடலுக்குள் புதைந்து கிடந்தன.ஆனால் என்ன செய்வது?உயிர் இருக்கும் வரை பிழைப்பதற்கான முயற்சிகளையாவது செய்வோம் என பயணித்தனர்.படகுக்காரரின் சகோதரிகள் இருவரும் உடனிருந்தனர்.அங்கு இருந்தவர்கள் அவர்களின் அண்ணன் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்கள்” சீக்கிரம் வந்துவிடுவார்” என்று கூறியதால் நம்பிக்கையுடன் இருந்தனர்.அப்போது படகுக்காரர் மட்டும் தனியாக சென்று படகின் இஞ்சினை நிறுத்திவிட்டு, படகினை இழுத்துக்கொண்டே வந்தார்.பின்னர் எஞ்சியவர்கள் படகில் ஏறிஅமர்ந்து கொண்டு அதிகாலை வேளையில் கரையை நெருங்கினர். ராமேஸ்வரம் கோயில் கோபுரவிளக்கு உயிருக்கு ஒளியூட்டியது. சிறிதுநேரத்தில் படகில் இருந்த அனைவரும்  கரையில் வந்து சேர்ந்தனர். உடனே தமிழக ரோந்துப்படைகள் அவர்களை சுற்றிவளைத்து,பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர்.பின்னர் கூடலிங்கத்தின் குடும்பத்தார் மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு ஊர்மக்கள் பழைய உடைகளை அவர்களுக்கு கொடுத்து உதவினர்.அகதிகளின் முகாமைவிட்டு அவர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று தடை போடப்பட்டிருந்தது.கூடலிங்கம் தான் பழைய நிலையைவிட மோசமாகிவிட்டதை உணர்ந்தார்.இப்போது தனது சொந்தநாட்டிலேயே அகதியாக இருப்பதை எண்ணி நொந்து கொண்டார். இருந்தாலும் நாம் செல்லும் இடமெல்லாம் பாதைகளே என்ற நம்பிக்கை,அவர் கண்களில் கம்பீரமாக இருந்தது.